Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

தோல்வி பயத்தில் திமுக மீது பழி சுமத்துகின்றனர்: குற்றம் செய்திருந்தால் நடவடிக்கை எடுக்காதது ஏன்?- அதிமுக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை

தோல்வி பயத்தில் திமுக மீது அதிமுக குற்றம் சுமத்தியுள்ளது. அவ்வாறு குற்றம் செய்திருந்தால், திமுக மீது அதிமுக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், தனது மகன் உதயநிதியை ஆதரித்து நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ஊடகங்களில் திமுக அமோக வெற்றிபெறும் என கருத்துக் கணிப்புகள் வெளிவருகின்றன. அது ஆளுங்கட்சிக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அச்சத்தாலும், தோல்வி பயத்தாலும் ஏதேதோ உளறத் தொடங்கியுள்ளனர் ஆளுங்கட்சியினர்.

திமுக செய்த தவறுகள் என்று, நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளாக பிரசுரம் செய்து, திமுகவின் வெற்றியை எப்படியாவது தடுக்கும் முயற்சியில் அதிமுகவினர் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை. அதிமுகதான் ஆட்சியில் இருக்கிறது. அவர்கள் விளம்பரம் கொடுத்திருப்பதுபோன்று, நம் மீது ஏதாவது தவறு இருந்திருந்தால், அவர்கள் போட்டிருக்கும் செய்தி உண்மையாக இருந்திருந்தால், நம் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

அப்படி தவறு செய்திருந்தால், வழக்குப் போட்டிருக்க வேண்டும். நம்மைக் கைது செய்திருக்க வேண்டும். அதற்குரிய தண்டனை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இப்படியொரு விளம்பரத்தைக் கொடுத்து, மக்களை திசைதிருப்ப நினைக்கிறீர்கள். அது ஒருபோதும் நடக்காது.

ஜெயலலிதாவின் முதல்வர் பதவி எப்படி பறிபோனது என்பது மக்களுக்குத் தெரியும். அதிமுகவுக்கு வரும் 6-ம் தேதி தக்க பதிலடி கொடுப்பதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது, பொள்ளாச்சி சம்பவத்தில் 250-க்கும் மேற்பட்ட பெண்களைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தது, அதில் அதிமுக பிரமுகரின் நெருக்கமானவர்களுக்கு உள்ள தொடர்பு, காவல் துறை பெண் எஸ்.பி.க்கு சிறப்பு டிஜிபியால் ஏற்பட்ட பாலியல் தொல்லை போன்றவை அதிமுக ஆட்சியில் நடந்துள்ளன. இது மக்களுக்குத் தெரியும். இதற்கெல்லாம் முடிவு கட்ட, நீங்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, துறைமுகம் தொகுதி வேட்பாளர் பி.கே.சேகர்பாபுவை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின், “நம்மை எப்படியாவது ஒழித்துவிட மதவாத பாஜக அரசு எவ்வளவோ முயற்சிசெய்து வருகிறது. தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா என யார் வந்தாலும் , அது ஜீரோ தான். நாம் தான் ஹீரோ” என்றார்.

ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் ஜெ.ஜான் எபினேசரை ஆதரித்து ஸ்டாலின் பேசியபோது, "பிரதமர் நரேந்திர மோடி, தாராபுரம், மதுரை பகுதிகளுக்கு வந்தார். எய்ம்ஸ் கட்டி முடித்து விட்டோம், தமிழ்நாட்டுக்கு இந்தந்த திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொல்லும் தகுதி அவருக்கு இல்லை.

திமுக, காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக யார் ஆட்சி செய்கிறார்கள் என்று அவருக்குத் தெரியவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக முன்னாள், முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து கண்டறிந்து, அதற்குக் காரணமானவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்’’ என்றார்.

பெரம்பூர் தொகுதி வேட்பாளர் ஆர்.டி.சேகரை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின், "தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் வெற்றிபெறப்போகிறது. வெற்றிபெற்றால் என்ன செய்யப்போகிறோம் என்பது தொடர்பாக, 505 வாக்குறுதிகளை வழங்கியுள்ளோம்" என்றார்.

மாதவரம் தொகுதி வேட்பாளர் எஸ்.சுதர்சனத்தை ஆதரித்துப் பேசிய ஸ்டாலின் "4 ஆண்டுகளாக முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த அதிமுக ஆட்சி, மக்களுக்கு துரோகம் செய்து, அடிமையாக இருந்து, உரிமைகளை இழந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தலாக இதை மக்கள் கருத வேண்டும்" என்றார்.

தொடர்ந்து, எழும்பூர் தொகுதி வேட்பாளர் இ.பரந்தாமன், திரு.வி.க. நகர் தொகுதி வேட்பாளர் தாயகம் கவி ஆகியோரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை நிறைவுசெய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x