

புதுச்சேரியில் பணபலத்தால் வெல்ல பாஜக முயல்வதாக காங்கிரஸ் தலைவர்கள் கூட்டாககுற்றம் சாட்டினர். வாக்காளர்க ளுக்கு தங்ககாசு விநியோகம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும் கோரினர்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்பி, காங்கிரஸ் மேலிட தலைவர் சஞ்சய்தத் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூட்டாக கூறியதாவது:
சட்டமன்ற தேர்தலில் அரசியல் அதிகார துஷ்பிரயோகம், பணபலம் ஆகியவற்றை வைத்து வெற்றிபெற பாஜக முயற்சி செய்கிறது. திருநள்ளாறு தொகுதியில் பாஜக வேட்பாளரின் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த தங்க காசு மற்றும் ரொக்கப்பணத்தை பறக்கும் படையினரை பார்த்ததும் வீசிவிட்டு சென்றுள் ளனர். இதில் 140 தங்க காசுகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து போலீஸாரிடம் ஒப்படைத் துள்ளனர். இந்த தங்ககாசுகளில் ஒருபுறம் மோடியின் உருவமும், மறுபுறம் திருநள்ளாறு கோயில் படமும் இடம் பெற்றிருந்தது. பண பலத்தின் மூலம் வாக்காளர்களை வளைக்க முயற்சி செய்கின்றனர்.
திருநள்ளாறு தொகுதியில் வாக்காளர்களுக்கு தங்க காசுகள்விநியோகித்த விவகாரம் தொடர்பாக மத்திய தேர்தல் ஆணையத் திற்கும், புதுச்சேரி மாநில தேர்தல் துறை அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து தேர்தல் துறையும், காரைக்கால் மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது ரங்கசாமி, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என தொடர்ந்து கூறி வருகிறார். முன்னுக்குப்பின் முரணாக பேசுவதாகவும் அவர் கூறுகிறார். கடந்த 5 ஆண்டு காலமாக புதுவை மக்களின் பிரச்சினைக்கு வாய் திறக்காத ரங்கசாமி தற்போது தேர்தலுக்காக மட்டும் வாய் திறந் துள்ளார். அவருடைய ஆட்சிக் காலத்தில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதை மறந்துவிட்டார். ரங்கசாமிதான் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார்.
கடந்த 2014 முதல் 2016 வரை மத்தியில் பாஜ அரசு மத்தியில் இருந்தபோது, என்ஆர் காங்கிரஸ் எந்தவித நிபந்தனையும் இன்றி பாஜகவுக்கு ஆதரவளித்தது. அப்போது மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி, கூடுதல் நிதி கிடைத்ததா? தற்போது கூட பிரதமர் பேசிய மேடையில் ரங்கசாமி மாநில அந்தஸ்து வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பிரதமரின் உரையில் பதில் இல்லை. இதன்மூலம் பாஜக புதுவையை புறக்கணிக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
அரசு காலிப் பணியிடங்களை பல துறைகளில் நிரப்பி உள்ளோம். ஆளுநர் தடுத்ததால் சில துறைகளில் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. அதோடு கால தாமதமும் ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகாலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் தளர்வு அளிப்போம். அனைத்து பணியிடங்களையும் நிரப்புவோம். மக்கள் விரோத சக்தி யார் என்பதை புதுவை மக்கள் உணர்ந்துள்ளனர் என்று குறிப்பிட்டனர்.