தமிழக தேர்தல் முடிவை இந்தியாவே எதிர்நோக்கி காத்திருக்கிறது: மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து திருச்சி சிவா எம்.பி பிரச்சாரம்

தமிழக தேர்தல் முடிவை இந்தியாவே எதிர்நோக்கி காத்திருக்கிறது: மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து திருச்சி சிவா எம்.பி பிரச்சாரம்
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி நேற்று காலை திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார்.

அப்போது அவர் பேசும்போது, ‘‘தமிழக தேர்தல் முடிவை இந்தியாவே எதிர்நோக்கி காத்திருக்கிறது. மற்ற மாநிலங்களில் பண பலம், அதிகாரம் போன்றவற்றால் கட்சிகளையும், மக்களையும் அச்சுறுத்தி ஆட்சிக்கு வந்த பாஜக, தமிழகத்தில் இருந்து புறமுதுகிட்டு ஓடப்போகிறது.

ஏப்.6-ம் தேதி ஒவ்வொரு வாக்காளரும் நீதிபதி. கடந்த கால அனுபவத்தை எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக ஏதேனும் நன்மை செய்ததா? துன்பமே மிகுதியாக இருந்தது. படித்தவர்களுக்கு வேலையில்லை. விலைவாசி உயர்ந்தது. எனவே, இந்த ஆட்சியை மாற்றும் பொறுப்பு மக்களுக்கு தானாகவே வந்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே நல்லாட்சி தர முடியும்.

அதிமுகவினர் கொள்ளையடித்து வைத்துள்ள பணத்தைக் கொடுத்து, மக்களின் வாக்குகளை விலைபேச வருகின்றனர். நாம் விற்பனை செய்யக்கூடாது. மாற்றத்தை உருவாக்க திமுகவுக்கே வாக்களிக்க வேண்டும்’’ என்றார்.

பின்னர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று மாலை தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை துவாக்குடி பேருந்து நிலையம் அருகே மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ‘‘எதிர்க் கட்சியாக இருந்ததால் கடந்த 5 ஆண்டுகளாகப் போராடிப் போராடி இங்கு நலப்பணிகளை செய்தோம். இப்போது நமக்கான ஆட்சி வரப்போகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக போகிறார்.

எனவே என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in