திருச்சிக்கான திட்டங்களை உரிமையுடன் கேட்டுப் பெற மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் கே.என்.நேரு வேண்டுகோள்

திருச்சிக்கான திட்டங்களை உரிமையுடன் கேட்டுப் பெற மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் கே.என்.நேரு வேண்டுகோள்
Updated on
1 min read

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை தில்லைநகரில் நேற்று காலை தொடங்கினார். உறையூர், புத்தூர், உய்யக்கொண்டான் திருமலை, தென்னூர், ஆழ்வார்தோப்பு, மிளகுபாறை, பொன்னகர், கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர், காஜா மலை, ஒத்தக்கடை பகுதியில் வாக்கு சேகரித்த அவர், நேற்று மாலை பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் திடலில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

அப்போது அவர் பேசியது: உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் 100 சதவீத வெற்றி பெற்றோம். அதேபோல இந்த தேர்தலிலும் இங்குள்ள 9 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால்தான், திருச்சி மாவட்டத்துக்குத் தேவையான திட்டங்களையும் உரிமையுடன் கேட்டுப் பெற முடியும். திமுக ஆட்சியில் எந்த திட்டம் அறிவிக்கப்பட்டாலும், அதை முதலில் திருச்சி மேற்கு தொகுதிக்கு கொண்டு வந்து சேர்ப்பேன். திருச்சியை எழில்மிகு நகரமாக மாற்றுவேன் என்றார்.

அதைத்தொடர்ந்து கே.என்.நேரு அளித்த பேட்டியின்போது, ‘‘நில அபகரிப்பு வழக்குகளில் அதிமுகவினர்தான் சிக்கியுள்ளனர். திமுகவினர் இல்லை.

வாக்காளர்களுக்கு அதிமுக வினர் பணம் கொடுத் தால் கொடுக்கட்டும். திமுக ஆட்சி வந்தவுடன் திருச்சியில் சாலை வசதி, புதை சாக்கடை வசதி, சீரான குடிநீர் விநியோகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இங்கு சுமார் 20 ஆயிரம் வீடுகளுக்கு பட்டா இல்லாமல் உள்ளது. அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அப்போது மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜய் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in