Last Updated : 24 Nov, 2015 09:53 AM

 

Published : 24 Nov 2015 09:53 AM
Last Updated : 24 Nov 2015 09:53 AM

தமிழக காங்கிரஸ் வர்த்தகர் பிரிவு: தலைவர் பதவியில் இருந்து எச்.வசந்தகுமார் திடீர் நீக்கம்

தமிழக காங்கிரஸ் வர்த்தகர் பிரிவு தலைவர் பதவியில் இருந்து எச்.வசந்தகுமார் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக காங்கிரஸ் துணைத் தலைவராக செயல்பட்டு வரும் எச்.வசந்தகுமார், கூடுதல் பொறுப் பாக தமிழக காங்கிரஸ் வர்த்தகர் பிரிவு தலைவராகவும் இருந்து வரு கிறார். இன்று (நவ. 23) முதல் அவர் வர்த்தகர் பிரிவு தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அதேநேரத்தில் தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார்.

காங்கிரஸ் வர்த்தகர் பிரிவு புதிய தலைவராக எம்.எஸ் திரவியம் செயல்படுவார். அவருக்கு காங்கிரஸில் உள்ள வர்த்தக சமுதாயத்தினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலை வர் பதவியில் இருந்து இளங் கோவனை நீக்க வலியுறுத்தி ப.சிதம்பரம், குமரிஅனந்தன், கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ண சாமி, கே.கோபிநாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து புகார் தெரிவித்தனர். இக்குழுவில் எச்.வசந்தகுமாரும் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் அவரிடமிருந்த கட்சிப் பதவி திடீரென பறிக்கப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் சகோதரரான தொழிலதிபர் எச்.வசந்தகுமார், வர்த்தகர் காங்கிரஸ் தலைவர் பதவியில் நீண்டகாலமாக இருந்து வந்தார். கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட அவர், 2 லட்சத்து 44 ஆயிரத்து 244 வாக்குகளைப் பெற்று 2-வது இடத்தைப் பிடித்தார். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களில் டெபாசிட் தொகையை திரும்பப் பெற்றது அவர் மட்டுமே.

காங்கிரஸ் வர்த்தகர் பிரிவு தலைவர் பதவியில் இருந்து வசந்தகுமார் நீக்கப்பட்டது, அவரது ஆதர வாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ‘தி இந்து’விடம் பேசிய வசந்தகுமார், ‘‘தமிழக வர்த்தகர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து என்னை இளங்கோவன் நீக்கியுள்ளதாக கேள்விப்பட்டேன். இந்தப் பொறுப்பில் என்னை யார் நியமித்தது என்ற கேள்வியை மட்டும் இப்போதைக்கு அவரிடம் கேட்க விரும்புகிறேன்’’ என்றார்.

இதுகுறித்த இளங்கோவனிடம் கேட்டபோது, ‘‘எச்.வசந்தகுமார் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப் படவில்லை. கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த வர்த்தகர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளார். ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x