Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM

தி.மலை மாவட்டத்தை புறக்கணித்த அரசியல் கட்சி தலைவர்கள்: வேட்பாளர்கள் பெரும் ஏமாற்றம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய முன்னணி அரசியல் கட்சி தலைவர் கள் வராததால் வேட்பாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத் தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக போட்டியிடுகிறது. இதையொட்டி, தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் செய் துள்ளார். அதே நேரத்தில், நட்சத்திர பேச்சாளர்கள் இல்லாத நிலையில், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் பிரச்சாரம் செய்ய வராததால், திமுக வேட்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இடதுசாரிகள் புறக்கணிப்பு

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய வரவில்லை. மெகா கூட்டணி அமைத்தபோதும், ஒரு தலைவர் கள் கூட பிரச்சாரம் செய்ய வராமல் போனது திமுகவினரை கவலையடைய செய்துள்ளது.

தி.மலை மாவட்டத்தில், தங்கள் கட்சிகளுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்காமல் போனதால், கூட்டணி கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. அதற்கு மாற்றாக, தங்களது கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மிகுந்த கவனம் செலுத்தி உள்ளனர். அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் திமுக உட்பட கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்துள்ளார்.

துணை முதல்வர் வரவில்லை

திமுக கூட்டணியில் உள்ளது போல், அதிமுக கூட்டணியிலும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை. அக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக தலைவர்கள், தங்கள் கட்சி போட்டியிடும், திருவண்ணாமலை தொகுதியில் மட்டும் கவனம் செலுத்தி உள்ளனர். அதில், இல.கணேசனை தவிர்த்து, சி.டி.ரவி உள்ளிட்ட தலைவர்கள், பிரச்சார பேரணியை தொடங்கி வைத்ததுடன் கடமையை முடித்துக் கொண்டனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ், தங்கள் கட்சி போட்டியிடும் வந்தவாசி மற்றும் கீழ்பென்னாத்தூரில் பிரச்சாரம் செய்துவிட்டு சென்றார். அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அழுத்தம் கொடுத்த காரணத்தால், அவரது தொகுதியில் மட்டும் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எட்டிக்கூட பார்க்கவில்லை. கூட்டணி கட்சி தலைவர்கள் இப்படி என்றால், அதிமுக ஒருங்கிணைப்பாளரான, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூட, தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வரவில்லை. இரண்டு பிரபல கட்சிகளும், கூட்டணி தலைவர்கள் ஆதரவின்றி தனித் தன்மையுடன் தேர்தலை சந்திக்கிறது.

மநீம வேட்பாளர்கள் பரிதாபம்

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கள் தனித்து விடப்பட்டுள்ளனர். அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் கவனம் செலுத்த முன்வரவில்லை. அவரது கட்சியில் உள்ள நட்சத்திர பேச்சாளர்களும் கண்டுகொள்ளவில்லை. மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், தனது கட்சி சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளார். இதனால், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள், தங்களது சொந்த முயற்சியில் தேர்தல் சந்திக்கின்றனர்.

தேமுதிகவுக்கு மட்டுமே பிரச்சாரம்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், திருவண்ணாமலை முதல் ஆரணி வரை பிரச்சாரம் செய்துள்ளார். அப்போது அவர், கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அதே நேரத்தில், தேமுதிக போட்டியிடும் 3 தொகுதிகளில் மட்டும் விஜய பிரபாகரன் பிரச்சாரம் செய்துள்ளார்.

அமமுக தொகுதிகளை கண்டு கொள்ளவில்லை. உடல் நலக் குறைவு காரணமாக விஜய காந்த், கரோனா தொற்றால் சுதீஷ், விருத்தாசலத்தில் போட்டியிடுவதால் பிரேமலதா ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வரவில்லை. இருப்பினும், தேர்தல் களத்தில் தீவிர மாக உள்ளனர். அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சுயேட்சை கள் திணறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x