

வாக்காளர்களுக்கு பணப் பட்டு வாடா செய்வதை தடுக்க முயன்ற உதவி காவல் ஆய்வாளர் உட்பட 4 காவலர்களை திமுக நிர்வாகிகள் உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு பணத்துடன் தப்பிச்சென்ற சம்பவம் வாணியம்பாடி அருகே நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டி வாக்காளர் களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்க பறக்கும் படை யினர், தேர்தல் நிலை கண் காணிப் புக்குழுவினர் மற்றும் காவல் துறையினரை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் ஒவ்வொரு தொகுதி வாரி யாக வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர், காவல் துறையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 7 மணிக்கு முடிவடைந்தது.
இது ஒரு புறம் இருக்க அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக வாக் காளர்களுக்கு ஆங்காங்கே பணம் விநியோகம் செய்ய பல குறுக்கு வழிகளை கையாண்டு வருகின்றனர். இதை தேர்தல் பறக்கும் படையினர் கண்காணித்து பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வாக்காளர் களுக்கு பணம் வழங்குவதை தடுத்து நிறுத்தி பணம் வழங்கி யவர்களை கையும், களவுமாக பிடிக்க முயன்ற காவல் துறையினரை திமுக நிர்வாகிகள் உருட்டுக்கட்டையால் தாக்கி கைப்பற்றப்பட்ட பணத் துடன் தப்பிச்சென்ற சம்பவம் வாணியம்பாடியில் நேற்று நடை பெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் வில்வநாதன் போட்டியிடுகிறார். ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியில் திமுக நிர்வாகிகள் ரவி, பெருமாள் மற்றும் செல்வராஜ் தங்களது கட்சி நிர்வாகிகளுடன் வாக்காளர்களின் பெயர் பட்டிலை கையில் வைத்துக்கொண்டு வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணத்தை வழங்கி திமுக வேட்பாளர் வில்வநாதனுக்கு வாக் களிக்குமாறு பிரச்சாரம் செய்தனர்.
இது குறித்து தகவலறிந்த வாணி யம்பாடி கிராமிய உதவி காவல் ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமையில் 3 காவலர்கள் அங்கு சென்றனர். அப்போது, ரவி கையில் இருந்த 52 ஆயிரத்து 500 ரூபாயை காவல் துறையினர் கைப்பற்றி அவரை காவல் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர்.
அப்போது, மற்றொரு தெருவில் பணத்தை விநியோகம் செய்து கொண்டிருந்த திமுக நிர்வாகி களான பெருமாள், செல்வராஜ் மற்றும் அவருடன் இருந்த சிலர் அங்கு விரைந்து சென்று உருட்டுக்கட்டையால் உதவி காவல் ஆய்வாளர் கமலக்கண்ணன் உட்பட 4 பேரையும் சரமாரியாக தாக்கிவிட்டு, காவல் துறையினர் கைப்பற்றிய ரூ.52,500-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.
திமுக நிர்வாகிகள் தாக்கியதில் உதவி காவல் ஆய்வாளர் கமலக் கண்ணன் உட்பட 4 பேரும் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வாணி யம்பாடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வந்த புகாரின் பேரில் திமுக நிர்வாகி ரவியை வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய திமுக நிர்வாகிகள் செல்வராஜ், பெருமாள் உட்பட 8 பேரை தேடி வருகின்றனர்.