

பாஜகவை எதிர்ப்பதற்கான விரிவான பதிலை திமுக தலைவர் ஸ்டாலின் அளித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது மாணவர்கள், இளைஞர்கள் ஸ்டாலினிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
நடப்பது சட்டப்பேரவைத் தேர்தல். முதல்வர் வேட்பாளராகப் போட்டியிடுகிறீர்கள். ஆனால், பாஜக ஒரு இடத்தில்கூட வரக்கூடாது என்று ஏன் இவ்வளவு கடினமாக எதிர்க்கிறீர்கள்? என்ற கேள்வியை ஸ்டாலினிடம் இளைஞர்கள் முன்வைத்தனர்.
அதற்கு ஸ்டாலின் அளித்த பதில்:
''முதல்வராக இருக்கக்கூடிய பழனிசாமி, மக்களைச் சந்தித்து வாக்குகள் வாங்கி முதல்வராக வரவில்லை. அதேபோல் மோடி பிரதமராக வரவேண்டும் என்று தமிழகத்தில் யாரும் வாக்கு அளிக்கல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு இடத்தில்கூட பாஜக வெற்றி பெறவில்லை.
ஆனால், தமிழ்நாட்டுக்குப் பல கெடுதல்களைச் செய்துள்ளனர். தமிழை அழிக்க வேண்டும், சமஸ்கிருதம், இந்தியைத் திணிக்க வேண்டும் என்று செயல்படுகின்றனர். நீட்டைக் கொண்டுவந்து ஏழை எளிய பிள்ளைகள் மருத்துவம் படிக்கமுடியாத நிலையை உருவாக்கியுள்ளனர்.
மாநில உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த உரிமைகளைப் பறிப்பதற்கு அவர்களது செயல்களுக்கெல்லாம் இங்குள்ள அதிமுக ஆட்சி துணை நிற்கிறது. அதனால்தான் நாங்கள் கடுமையாக பாஜகவை எதிர்க்கிறோம். ஒரு அதிமுக எம்எல்ஏ வென்றாலும் அவர் அதிமுக எம்எல்ஏவாக இருக்க மாட்டார். அவர் பாஜக எம்எல்ஏவாகத்தான் மாறுவார். அதனால்தான் கடுமையாக எதிர்க்கிறோம்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம். இது அண்ணாவின் கொள்கை, கருணாநிதியின் கொள்கை. மாநில சுயாட்சிக்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம், போராடுவோம்.
இன்றைக்கு மக்களவையில் 39 மக்களவைத் தொகுதிகளில் ஒரே தொகுதியில்தான் அதிமுக வென்றது. யார் என்பது உங்களுக்குத் தெரியும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்தான் அவர். அதிமுக எம்.பி. என்றுதான் பெயர். ஆனால், அவர் பாஜக எம்.பி.யாகத்தான் செயல்படுகிறார்.
பொதுவாக ஒரு எம்.பி., எம்எல்ஏ அவர் லெட்டர் பேடில் அவரது கட்சித் தலைவர் படத்தைத்தான் வைக்கவேண்டும். ஆனால், இவர் மோடியின் படத்தை லெட்டர் பேடில் போட்டுள்ளார். அதனால்தான் சொல்கிறேன். எப்படி ஒரு எம்.பி. வெற்றி பெற்று பாஜக நபராகச் செயல்படுகிறாரோ, அதேபோல் ஒரு எம்எல்ஏவும் வெற்றி பெற்றால் பாஜக எம்எல்ஏவாகத்தான் செயல்படுவார். அதனால்தான் ஒரு இடத்தில் கூட பாஜக வரக்கூடாது என்கிறேன்''.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.