

புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகால நாராயணசாமி தலைமையிலான அரசு ஊழல் நிறைந்த அரசாக இருந்தது என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜி.என்.எஸ்.ராஜசேகரனுக்கு ஆதரவாக வாக்குகள் கோரி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று (ஏப்.4) திருநள்ளாற்றில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, ''புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கடந்த 5 ஆண்டுகால நாராயணசாமி தலைமையிலான அரசு மக்களைப் பற்றிக் கவலைப்படாத, திறமையற்ற, செயல்படாத, ஊழல்கள் நிறைந்த அரசாக இருந்தது. அப்போது இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட எல்லாத் தரப்பு மக்களும் புறக்கணிக்கப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில், நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, பல எதிர்ப்புகளுக்கிடையே காரைக்காலுக்கு ஜிப்மர் கிளையைக் கொண்டுவந்தேன். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் அதனை மேம்படுத்த மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், அதன் மேம்பாடு பின்தங்கியுள்ளது.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழக, புதுச்சேரி மீனவர்கள் யாரும் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படவில்லை. மேலும், இலங்கையில் சிறையிலிருந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளனர். நீங்கள் தாமரையை மலரச் செய்தால் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் வளர்ச்சி பெறும்'' என்று ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
முன்னதாக, திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் அருகிலிருந்து ஜே.பி.நட்டா திறந்த வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டவாறு வந்து, தேரடி அருகில் மக்களிடையே வாக்குகள் கோரினார். பின்னர் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார்.
அப்போது மத்திய இணை அமைச்சரும், புதுச்சேரி மாநிலத்துக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அர்ஜூன் ராம் மேக்வால், புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, பாஜக மாநில துணைத் தலைவர் எம்.அருள்முருகன், மாவட்டத் தலைவர் ஜெ.துரை சேனாதிபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.