

விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று விருத்தாச்சலம் நகரப் பகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக- தேமுதிக- எஸ்டிபிஐ கூட்டணி சார்பில் விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா போட்டியிடுகிறார். அவர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது சகோதரர் சுதீஷுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அப்போது பிரேமலதா பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில், கடலூர் மாவட்டச் சுகாதாரத்துறை, பிரேமலதாவை கரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தியது. முதலில் மறுப்புத் தெரிவித்த பிரேமலதா, பின்னர் பரிசோதனை செய்துகொண்டார். முடிவில் அவருக்குத் தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 15 தினங்களாக விருத்தாச்சலம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில், கட்சித் தொண்டர்களுடன் கிராமம் கிராமமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட பிரேமலதா, கடந்த 2-ம் தேதி விஜயகாந்தை அழைத்து வந்து விருத்தாச்சலம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் இன்று இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஈஸ்டர் திருநாளான இன்று விருத்தாச்சலத்தை அடுத்த கோணாங்குப்பம் கிறிஸ்தவ ஆலயத்தில் வழிபாடு செய்தவர்களிடம் வாக்குச் சேகரித்தார். தொடர்ந்து வயல்வெளிகளில் களையெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களிடம் வாக்குச் சேகரித்தார். அப்போது விருத்தாச்சலத்தைத் தனி மாவட்டமாக உருவாக்கப் பாடுபடுவேன் எனவும், விருத்தாச்சலம் பகுதியில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன் எனவும் தெரிவித்தார்.