

அதிமுகவை அனிதா ஆதரிப்பது போலச் சித்தரித்து ஒரு வீடியோவை அமைச்சர் பாண்டியராஜன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அப்பதிவை நீக்கிய அமைச்சர், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இன்று காலை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அனிதா தற்போது அதிமுகவை ஆதரிப்பது போலச் சித்தரித்து ஒரு வீடியோவைப் பதிவிட்டிருந்தார். அதில் அனிதா பேட்டியின் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அனிதாவின் சகோதரர் மணிரத்னம், அமைச்சர் பாண்டியராஜனுக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் காணொலி பதிவிட்டிருந்தார்.
''அனிதா மரணம் எதனால் நிகழ்ந்தது, அன்று நீட் தேர்வு சட்டமாகும்போது அதிமுக வெளிநடப்பு செய்து ஆதரவளித்தது போன்ற பல காரணங்கள் உங்களுக்கு எதிராக இருக்கும்போது கொஞ்சம் கூட அதுகுறித்துக் கூச்சப்படாமல் இதுபோன்ற காணொலியை எப்படி வெளியிட முடிகிறது, உடனடியாக அதை நீக்குங்கள்'' என்று மணிரத்னம் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் காணொலியை நீக்கினார். அமைச்சர் பாண்டியராஜன் அனிதாவின் பேட்டியைத் தவறாகச் சித்தரித்துக் காணொலி வெளியிட்டதாக மணிரத்னம், அரியலூர் மாவட்ட எஸ்.பி., வீ.பாஸ்கரனிடம் புகார் மனு அளித்தார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் யாரோ காணொலியை ஏற்றியுள்ளார்கள் என அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
அவரது விளக்கம்:
''அன்பார்ந்த நண்பர்களே! இன்று காலை எனது ட்விட்டர் பக்கத்தில் நீட் பற்றி அதன் மூலம் குறித்து ஒரு ட்வீட் போடப்பட்டுள்ளது. அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என்னுடைய அனுமதி இல்லாமல் பதிவு வந்துள்ளது. அது எப்படி என்பது குறித்து கண்டறிந்து அதைச் செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சைபர் கிரைமிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும். எந்த நிலையிலும் யாரையும் அவதூறு செய்யும் எண்ணம் எனக்கு கிடையாது. ட்வீட் பதிவு செய்தவர்களைக் கண்டறிந்து கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்''.
இவ்வாறு பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவுக்குக் கீழே எப்படி எச்.ராஜா சொன்னது மாதிரி அட்மின் தவறு செய்துவிட்டாரா என்று சிலரும், திமுக ஐடி விங்கின் சதி வேலை என்று சிலரும் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பதிவிட்டு வருகின்றனர்.