Last Updated : 04 Apr, 2021 02:01 PM

 

Published : 04 Apr 2021 02:01 PM
Last Updated : 04 Apr 2021 02:01 PM

தேர்தல் நடத்தை விதிமீறல்: கமல், ராதாரவி மீது போலீஸார் வழக்குப் பதிவு 

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ராதாரவி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இவர் தனது தொகுதிக்குட்பட்ட இடங்களில் கடந்த சில நாட்களாகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த 1-ம் தேதி தெற்கு தொகுதிக்குட்பட்ட ராம் நகர், ராமர் கோயில் பகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ராமர் மற்றும் அம்மன் கடவுள் வேடமிட்ட நாடகக் கலைஞர்களை அழைத்துவந்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். இது தொடர்பாகக் கோவை தெற்கு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும், தெலுங்கு வீதியைச் சேர்ந்த பழனிகுமார் என்பவர் காட்டூர் போலீஸில் இன்று புகார் அளித்தார்.

அதில், ‘கடவுள் வேடமிட்ட நாடக நடிகர்களைக் கொண்டு கமல்ஹாசன் பிரச்சாரம் செய்துள்ளார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக, காட்டூர் போலீஸார் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் கீழ், கமல்ஹாசன் மற்றும் 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராதாரவி மீது வழக்குப் பதிவு

அதேபோல், கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக, அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் ராதாரவி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரச்சாரம் மேற்கொண்டார். கெம்பட்டி காலனியில் நடந்த பொதுக் கூட்டத்திலும், திறந்த வேன் மூலம் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்திலும் கலந்துகொண்டு ராதாரவி வாக்குச் சேகரித்தார்.

அப்போது, கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் கமல்ஹாசன் குறித்து ராதாரவி அவதூறாகப் பேசியதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த விவகாரம் தொடர்பாக, கோவை தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்பிரமணியன் ரேஸ்கோர்ஸ் போலீஸில் இன்று புகார் அளித்தார். ரேஸ்கோர்ஸ் போலீஸார் 509 இந்திய தண்டனைச் சட்டப்பிரிவின் கீழ் ராதாரவி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x