Last Updated : 04 Apr, 2021 01:46 PM

 

Published : 04 Apr 2021 01:46 PM
Last Updated : 04 Apr 2021 01:46 PM

அனிதா வீடியோ விவகாரம்: மாஃபா பாண்டியராஜன் மீது எஸ்.பி. அலுவலகத்தில் அனிதா சகோதரர் புகார் 

அரியலூர் மாவட்ட எஸ்.பி., வீ.பாஸ்கரனிடம் புகார் மனு அளித்த அனிதாவின் சகோதரர் மணிரத்னம்.

அரியலூர்

அதிமுக அமைச்சரும், வேட்பாளருமான கே.பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நீட் தேர்வுக்கு எதிராகத் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் சகோதரர் மணிரத்னம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் இன்று (ஏப்.04) புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:

''எனது தங்கை அனிதா 12-ம் வகுப்பில் 1,176 மதிப்பெண்கள் எடுத்தும், நீட் தேர்வில் வெற்றி பெறவில்லை. மருத்துவ இடம் கிடைக்காத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டார். ஏற்கெனவே, நீட் தேர்வுக்கு எதிராக அனிதா போராட்டங்களில் ஈடுபட்டதையும், நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என வலியுறுத்தியதையும் தமிழ்நாட்டு மக்கள் அறிவர்.

இந்நிலையில், அமைச்சரும் அதிமுக வேட்பாளருமாக கே.பாண்டியராஜன், இறந்துபோன எனது தங்கை பேசுவதாகச் சித்தரித்து, ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன்படி குற்றமாகும். அவர் வெளியிட்ட அந்த வீடியோ அனிதாவின் போராட்டத்தையும், இறப்பையும் கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. இது அவர் சார்ந்த கட்சியின் வெற்றி வாய்ப்புக்காக, எங்கள் குடும்பத்தினரின் சம்மதம் இன்றி, அனிதா படம் மற்றும் வீடியோவைப் பயன்படுத்தி உள்ளனர். இது குற்றமாகும்.

வாக்காளர்களை ஏமாற்றும் மோசடிச் செயலில் ஈடுபட்டுள்ள பாண்டியராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளேன்''.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அமைச்சர் பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த அனிதா வீடியோவை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x