Published : 13 Nov 2015 08:46 am

Updated : 13 Nov 2015 08:49 am

 

Published : 13 Nov 2015 08:46 AM
Last Updated : 13 Nov 2015 08:49 AM

கடலூரில் இயல்புநிலை திரும்பவில்லை: நிவாரணம் கேட்டு மறியல்- மக்கள் மீது போலீஸ் தடியடி

பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு

*

கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.


பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டதால் ஆங்காங்கே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத் தனர்.

கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த 9-ம் தேதி கனமழை கொட்டித் தீர்த்தது. நெய்வேலியில் அதிகபட்சமாக 48 செ.மீ மழை பதிவானது.

இந்த கனமழை யால் ஏற்பட்ட வெள்ளத் தால் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, காட்டு மன்னார் கோவில், விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் ஆகிய 9 வட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு, மரவள்ளி, சவுக்கை என 5 ஆயிரம் ஹெக்டர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 5000 குடிசைகள் மழைநீரில் அடித்துச் செல்லப் பட்டன. இதில் அதிகபட்சமாக குறிஞ்சிப் பாடியில் 2893 குடிசைகள் சேதமடைந் துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

2000-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்திருப்பதால் 650 ஊராட்சிகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட் டத்தின் பெரும்பாலான சாலைகள் சேத மடைந்துள்ளன. இதனால் கிராமப்புறங் களுக்கான போக்குவரத்து தடைபட் டுள்ளது. குறிஞ்சிப்பாடி அருகே எல்லப்பன் பேட்டையில் ரயில் தண்ட வாளத்தின் கீழ் மண் அரிப்பு ஏற்பட்டுள் ளதால் தண்டவாளம் தொங்கு நிலையில் உள்ளது. இதனால் கடலூர்-திருச்சி பயணிகள் ரயில் மற்றும் நாகூர்-பெங்களூர் ரயில் விழுப்புரம் மார்க்கமாக இயக்கப்படுகிறது.

மீட்புப் பணிகள்

வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மக்களை மீட்க, 85 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், வெள்ளம் பாதித்த பகுதிகளில் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர். 57 கிராமங்களைச் சேர்ந்த 5120 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு 28 மையங்கள் மூலம் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட கிராமங் களில் போர்க்கால அடிப்படையில் பணி களை மேற்கொள்ள திருப்பூர், விழுப்புரம், தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து 2000 மின்வாரிய ஊழியர்கள் கடலூர் மாவட்ட கிராமங்களில் மின் இணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர். இதுவரை 473 ஊராட்சிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அரித்துச் செல்லப்பட்ட சாலை களில் மண் கொட்டி சாலையை சமன் படுத்தும் பணிகளும், குண்டும் குழியு மாக உள்ள சாலைகளிலும், துண்டிக்கப்பட்ட சாலைகளிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் அங்கு இயல்புநிலை திரும்பவில்லை.

அமைச்சர்கள் ஆய்வு

நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச் சரவைக் குழுவினர் நேற்று கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து ஆய்வு நடத்தினர். முதல்கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், மாவட்ட நிர்வாகம் மேற்கொண் டுள்ள பணிகள் திருப்திகர மாக உள்ளதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்துவெள்ள பாதிப்புக் குள்ளான குறிஞ்சிப்பாடி, மருவாய், பண்ருட்டி ஆகிய பகுதிகளுக்குச் சென்று நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, அரசின் நிவாரண உதவிகளை வழங்கினர்.

சாலை மறியல்

இதனிடையே நிவாரண உதவிகள் சரிவர கிடைக்கவில்லை எனவும், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பாரபட்சத்தோடு செயல்படுவதாகவும், மழைநீர் தேங்கி யுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை எனவும், மின் இணைப்பு வழங்குவதற்கு கட்டணம் கேட்பதாகவும் கூறி குள்ளஞ்சாவடி, ஆண்டிக்குப்பம், சிதம்பரம் அருகே து.மண்டபத்தில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த போலீஸார் அவர்களை கலைந்து போகுமாறு எச்சரித்தனர் மக்கள் தொடர்ந்து சாலை மறியல் செய்த தோடு, கோட்டாட்சியர் வந்து பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் என கோஷ மிட்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி அனைவரையும் கலைந்து போகச் செய்தனர்.

தானே’வை மிஞ்சிய உயிர் பலி

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வீசிய ‘தானே’ புயலின் கோரத் தாண்டவத்துக்கு 21 பேர் பலியாயினர். தற்போது மழை வெள்ளம் ஏற்படுத்திய உயிர்சேதம் ‘தானே’ புயலின்போது ஏற்பட்டதைக் காட்டிலும் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது. 32 பேர் இதுவரை மழை வெள்ளத்தால் இறந்துள் ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித் துள்ளது. ‘தானே’ புயலின்போது ஏற்பட்டதுபோலவே தற்போதும் கடலூர் மாவட்டம் முழுவதும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.கடலூர்வெள்ளம்மீட்புப் பணிகள்போலீஸ் தடியடிபோலீஸ் தடியடி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x