Last Updated : 04 Apr, 2021 11:54 AM

 

Published : 04 Apr 2021 11:54 AM
Last Updated : 04 Apr 2021 11:54 AM

அனுதாப வாக்குகளா, வளர்ச்சித் திட்டங்களா?- அரியலூர் தொகுதியைக் கைப்பற்ற அதிமுக, மதிமுக இடையே கடும் போட்டி 

அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன், திமுக வேட்பாளர் வழக்கறிஞர் கு.சின்னப்பா.

அரியலூர்

அரியலூர் தொகுதியைப் பொறுத்தவரை 13 வேட்பாளர்கள் களம் கண்டாலும், அதிமுக- மதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது.

அரியலூர் தொகுதியை மீண்டும் கைப்பற்ற அதிமுகவினர் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளையில், அரியலூர் தொகுதியைத் தங்கள் பக்கம் கொண்டு வர திமுகவினரும் மதிமுக வேட்பாளருக்கு தீவிரமாகத் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு கொறடாவும், அதிமுக மாவட்டச் செயலாளருமான தாமரை எஸ்.ராஜேந்திரன், மீண்டும் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். கடந்த முறை இந்தத் தொகுதியில் அறிமுக வேட்பாளராகக் களமிறங்கிய ராஜேந்திரன், திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கரை விட 2,043 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இதனால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ராஜேந்திரனுக்கு அரசு தலைமை கொறடா பதவியை வழங்கினார். இந்நிலையில், மீண்டும் அரியலூர் தொகுதியை முதல்வர் பழனிசாமி, ராஜேந்திரனுக்கு வழங்கியுள்ளார்.

இதனிடையே கடந்த முறை திமுக போட்டியிட்ட அரியலூர் தொகுதியை தற்போது அதன் கூட்டணிக் கட்சியான மதிமுகவுக்கு, திமுக வழங்கியுள்ளது. இங்கு மதிமுக மாவட்டச் செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான கு.சின்னப்பா உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இவர், ஏற்கெனவே திமுகவில் ஒரு முறையும், மதிமுகவில் இரண்டு முறையும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பதால், அனுதாப வாக்குகள் அதிகம் கிடைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும் உதயசூரியன் சின்னத்தில் சின்னப்பா போட்டியிடுவது அவருக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

மதிமுகவுக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டதும், திமுக இளைஞர்களுக்குச் சுணக்கம் ஏற்பட்டது. இதனிடையே வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, நமது வேட்பாளர் சின்னப்பா அரியலூரில் திமுகவில் போட்டியிட்டு தோல்வியை அடைந்தவர் என்று கூறியதும், அரியலூரில் திமுக எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்ட த.ஆறுமுகத்துக்குத் தீவிரமாக நான் பணியாற்றினேன் என சின்னப்பா பேசியதும், திமுகவினரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்று முதல் திமுகவினர், சின்னப்பாவை வெற்றியடையச் செய்ய முனைப்புடன் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தத் தொகுதி எம்எல்ஏவான ராஜேந்திரன், அரியலூருக்கு மருத்துவக் கல்லூரி, ஜெயங்கொண்டத்துக்கு அரசு கலைக் கல்லூரி, கொள்ளிடத்தில் தடுப்பணை, மருதையாற்றில் புதிய பாலங்கள் என, தான் கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களை முன்னிறுத்தி வாக்குகளைச் சேகரித்து வருகிறார். மீண்டும் என்னை வெற்றிபெறச் செய்தால் பல்வேறு திட்டங்களை அரியலூர் மாவட்டத்துக்குக் கொண்டு வருவேன் எனப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

மேலும், ராஜேந்திரனை ஆதரித்துத் தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் வாக்குச் சேகரித்ததும் அவருக்கு ஆதரவாக உள்ளது.

மதிமுக வேட்பாளர் சின்னப்பா, திருமானூரில் மகளிர் கல்லூரி, கொள்ளிடத்தில் கூடுதல் தடுப்பணை, அரியலூர் பேருந்து நிலையம் தரம் உயர்வு எனப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வாக்குச் சேகரித்து வருகிறார்.

சின்னப்பாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா ஆகியோர் வாக்குச் சேகரித்துச் சென்றுள்ளனர்.

இதனிடையே அமமுக சார்பில் அரியலூர் தொகுதியில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ துரை.மணிவேலும், ஐஜேகே சார்பில் மறைந்த பாடலாசிரியர் மருதகாசி பேரன் ஜவகரும் போட்டியிடுகின்றனர். இந்த நான்கு வேட்பாளர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக வாக்குகளையும், கணிசமாக உள்ள தேமுதிக வாக்குகளையும் அமமுக வேட்பாளர் மணிவேல் கைப்பற்றும் நிலையில், அதிமுக வேட்பாளருக்குப் பின்னடைவு ஏற்படும் என்றும், அதேவேளையில் பாமகவின் வாக்குகள் அதிமுக வேட்பாளரை முன்னெடுத்துச் செல்லும் என்றும், திமுகவுடன் கூட்டணியிலிருக்கும் விசிகவின் வாக்குகள், தொகுதியில் கணிசமாக உள்ள வலது, இடதுசாரிகளின் வாக்குகள், மதிமுகவின் வாக்குகள், அதிமுகவின் அதிருப்தியாளர்களின் வாக்குகள் திமுகவை முன்னெடுத்துச்செல்லும் என்றும் தொகுதியில் பேசப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும் அரியலூர் தொகுதியைக் கைப்பற்றுவதில் அதிமுக, மதிமுக கட்சிகள் கடுமையாகப் போராடி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x