

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. கடந்த 2-ம் தேதி வரை 31.75 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் 11 மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இந்த சூழலில், மாநிலங்களில் கரோனா பரவல் தொடர்பான விரிவான ஆய்வுக் கூட்டம் மத்திய அரசின் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் கடந்த 2-ம் தேதி நடந்தது.
இதில், தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது, ‘‘கரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்’’ என்று ராஜீவ் கவுபா அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. கரோனா பரிசோதனையை அதிகப்படுத்தி உள்ளதால், தினமும் தொற்றின் நேர்மறை விகிதம் 5 சதவீதத்துக்கும் கீழ் உள்ளது. ஆர்டி-பிசிஆர் பரிசோதனை எண்ணிக்கை 50 ஆயிரத்தில் இருந்து 85 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் 100 சதவீதம் ஆர்டி-பிசிஆர்பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது.
நோய்த் தொற்று ஏற்பட்டவருடன் இருப்பவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தொற்று இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி, தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்மூலம் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எங்காவது 3-க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அப்பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. ஏப்ரல் 2-ம் தேதி வரை 846 பகுதிகள் அவ்வாறு அறிவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தேவைக்கு அதிகமாகவே படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் கருவிகள், மருந்துகள், பாதுகாப்பு கவசங்கள் தயார் நிலையில் உள்ளன. கால தாமதமின்றி சிகிச்சை அளிக்க வசதியாக 108 அவசர கால ஊர்தி செயல்பாட்டில் உள்ளது.
தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன்படி நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு சுகாதாரம், உள்ளாட்சி, காவல், வருவாய் துறைகளின் அலுவலர்கள் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது. மார்ச் 16 முதல் ஏப்ரல் 2 வரை இவ்வாறு விதிகளை மீறியவர்களுக்கு ரூ.2.59 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மினி கிளினிக்குகள், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த 2-ம் தேதிவரை 31 லட்சத்து 75 ஆயிரத்து 349 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏப்ரல் 3-ம் தேதி (நேற்று) வரை 54 லட்சத்து 78 ஆயிரத்து 720 டோஸ் தடுப்பூசி வழங்கியுள்ளது.
இதுதொடர்பான கூடுதல் தகவல்களை பெற 104 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். மக்கள் முகக் கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியை கடைபிடித்தும், முறையாக கைகளைக் கழுவியும், அரசின் பிற அறிவுறுத்தல்களை கடைபிடித்தும் கரோனா தொற்றை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
13.16 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வருகை
மத்திய அரசிடமிருந்து, 2.14 லட்சம் டோஸ் கோவேக்சின், 11.02 லட்சம் டோஸ் கோவிஷீல்டு என மொத்தம் 13.16 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு நேற்று வந்தன. சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள சேமிப்பு மருந்து கிடங்கில் அவை வைக்கப்பட்டு, தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தமிழகத்தில் அதிகரித்து வரும், தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட சுகாதார இணைஇயக்குநர்களுக்கு, பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், அதிகரித்து வரும் தொற்றைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்துக்குள் தெரிவிக்க வேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் தகுதியானவர்களை வீட்டில் தனிமைப்படுத்த டாக்டர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு, தனிமைப்படுத்தப்பட்டவர்களால், மற்றவர்களுக்கு தொற்றுபரவாமல் தடுப்பதுடன் கண்காணிக்கவும் வேண்டும்.
ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் தொற்று கண்டறியப்பட்டால், அங்கு நோய் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவித்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், கரோனா தடுப்பூசி போடுவதன் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், தகுதியான அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.