Published : 04 Apr 2021 03:15 AM
Last Updated : 04 Apr 2021 03:15 AM

‘மகளுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என வேண்டுகோள்; பூங்கோதைக்கு சிக்கலை ஏற்படுத்திய தாயாரின் வீடியோ : ஆலங்குளம் தொகுதி திமுகவினர் அதிர்ச்சி

தனது மகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என, திமுக எம்எல்ஏ பூங்கோதையின் தாயார் பேசிய வீடியோ பதிவு, பூங்கோதைக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் மகளான இவர், ஆலங்குளம் தொகுதியில் தற்போது எம்எல்ஏவாக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவருக்கு நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், நிர்வாகிகளின் காலில் விழுந்து பூங்கோதை கெஞ்சிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

சகோதரர் புறக்கணிப்பு

பூங்கோதையின் சகோதரர் எழில்வாணன் திமுக நிர்வாகியாக உள்ளார். இவர், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். இவர்களுக்கு இடையே நீண்ட காலமாக குடும்பப் பிரச்சினை உள்ளது. தொகுதி மக்களிடம் அதிருப்தி இல்லாததால் ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில் பூங்கோதைக்கு மீண்டும் சீட் அளிக்கப்பட்டது. அதிருப்தி அடைந்த எழில்வாணன், தனது சகோதரிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யாமல் புறக்கணித்தார்.

தாயார் வேண்டுகோள்

இந்நிலையில், தனது மகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என பூங்கோதை எம்எல்ஏவின் தாயார் கமலா பேசிய வீடியோ பதிவு, நேற்று முதல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் பேசியுள்ள கமலா “எனது கணவர் யாரிடமும் ஒரு பைசா பணம் வாங்கியது கிடையாது. ஆனால், எனது மகள் அவருக்கு நேரெதிராக உள்ளார். பல்வேறு பகுதிகளில் இடங்களை வளைத்துப் போட்டுள்ளார். எனது மகள் மீண்டும் வெற்றி பெறக்கூடாது. அவர் வெற்றிபெற்றால் மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டார்.

பேராசை பிடித்தவர்

என்னை தரக்குறைவாக பேசியதுடன் தாக்கவும் செய்துள்ளார். இதனால் எனது கை, கால் உடைந்தது. எனது சொந்த பள்ளியை ஏமாற்றி, அவரது கணவர் பெயருக்கு மாற்றி எழுதி வாங்கிக்கொண்டார். புதுப்பட்டியில் உள்ள இடத்தை ஏமாற்றி, அவரது கணவர் பெயருக்கு மாற்றிக்கொண்டார். பேராசை பிடித்தவர் அவர். மீண்டும் வெற்றிபெற்றால் ஆலங்குளத்தையே விற்றுவிடுவார். அவர் தோற்க வேண்டும் என முருகரிடம் வேண்டியுள்ளேன். எனது மகள் ஊழல் பேர்வழி. எனது கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அந்த வழக்கு தொடர்பாக உதவி செய்யாதவர். சாகும்வரை நான் திமுகதான். எனது மகளுக்கு வாக்களிக்காதீர்கள். நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்” என்று கமலா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, பூங்கோதையின் கருத்தை அறிய பலமுறை தொடர்புகொண்டபோதும் அவரிடம் பேச முடியவில்லை. தேர்தல் பிரச்சாரத்தில் அவர் மும்முரமாக இருப்பதாக உதவியாளர் கூறினார். பூங்கோதையின் சகோதரர் எழில்வாணனும் தொலைபேசி அழைப்பை எடுத்து பேசவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x