Last Updated : 04 Apr, 2021 03:15 AM

 

Published : 04 Apr 2021 03:15 AM
Last Updated : 04 Apr 2021 03:15 AM

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குரல் பதிவு, டிஜிட்டல் திரையில் பிரச்சாரம்: சந்தைகள், பூங்காக்கள், குடியிருப்புகளில் வாகனங்களை நிறுத்தி வாக்கு சேகரிப்பு

தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் அரசியல் கட்சியினர் டிஜிட்டல் திரை பொருத்திய பிரச்சார வாகனங்களை அனுப்பி, அதன்மூலம் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் குரல் பதிவை ஒளிபரப்பி பிரச்சாரம் செய்கின்றனர். படம்: பு.க.பிரவீன்

கடந்த தேர்தல்களில் இல்லாத அளவுக்கு இத்தேர்தல் பிரச்சாரத்தில் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் குரல் பதிவும், டிஜிட்டல் திரைக்காட்சியும் பயன்படுத்தப்படுகின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்.6) நடைபெறுகிறது. இன்று இரவு 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்வதால், கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த தேர்தல்களில் வேட்பாளர்கள் இரண்டு தடவை தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்துவிடுவார்கள். இத்தேர்தலில் பலரும் அதுபோல பிரச்சாரம் செய்ய முடியவில்லை. குறைவான நாட்களும், தலைவர்கள் பிரச்சாரத்தின்போது அவர்களுடன் இருக்க நேரிட்டதாலும் ஒரேயொரு தடவைதான் தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்ய முடிந்துள்ளது.

அதனால், பிரதான கட்சிகள் மட்டுமல்லாமல், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் அறிவியல் தொழில்நுட்பத்தை முடிந்தவரை பயன்படுத்துகின்றனர். எவ்வளவுதான் சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தினாலும், மக்களை நேரடியாக கவரக்கூடிய பிரச்சார யுக்திகளுக்குத்தான் அதிகபலன் கிடைக்கும். அதனால் காய்கறிகள்,பழங்கள், கீரை வகைகள் போன்றவற்றைவிற்கும் வியாபாரிகள் தங்களது பொருட்கள் மற்றும் விலையை குரலில் பதிவுசெய்து, அதனை ஒலிபெருக்கி மூலம்
விளம்பரம் செய்து வர்த்தகம் செய்கின்றனர்.

அதுபோல தாங்கள் பிரச்சாரம் செய்யப் போக முடியாத இடங்கள், தங்களுக்குவாக்கு வங்கிகள் இருப்பதாகக் கருதும் இடங்கள், சந்தைகள், பூங்காக்கள் எனமக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள்,பிரதான குடியிருப்புகள் ஆகியவற்றில் கட்சியினர் டிஜிட்டல் திரை பொருத்திய தங்களது பிரச்சார வாகனங்களை அனுப்பி, அதன்மூலம் கட்சித் தலைவர் பேச்சை ஒளிபரப்பி பிரச்சாரம் செய்கின்றனர்.

அதிமுக, திமுக போன்ற பிரதான கட்சிகளுக்கு தலைமைக் கழகப் பேச்சாளர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் என நிறைய பேர் பிரச்சாரம் செய்கின்றனர். டிஜிட்டல் திரை பிரச்சாரத்தை அவ்வளவாக அவர்கள் மேற்கொள்வதில்லை. அதேநேரத்தில் நட்சத்திரப் பேச்சாளர்கள் அதிகம் இல்லாத நாம்தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிபோன்ற கட்சிகள் டிஜிட்டல் பிரச்சாரத்தை அதிகளவில் செய்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், அதிமுக, திமுக கட்சிகள் அதன் தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள், வேட்பாளர்களின் பேச்சுக்கள் மற்றும் வாக்குறுதிகளை டிஜிட்டல் முறையில் பதிவு செய்து ஆட்டோ, வேன் போன்ற வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்கின்றனர்.

நாம் தமிழர் கட்சியினர் முக்கியமான இடங்களில் பிரச்சார வாகனத்தை நிறுத்தி, அ்தில் பொருத்தப்பட்டுள்ள டிஜிட்டல் திரையில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சை ஒளிபரப்பி வாக்கு சேகரிக்கின்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அண்ணா நகர் வேட்பாளர் பொன்ராஜ், வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ்பாபு ஆகியோர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டிருந்தபோது, டிஜிட்டல் திரைகள் பொருத்தப்பட்டிருந்த பிரச்சார வாகனத்தை தேர்தல் பிரச்சாரத்தில் முழுவீச்சில் ஈடுபடுத்தினர். அக்கட்சி வேட்பாளர்கள் பலரும் இதுபோன்ற டிஜிட்டல் பிரச்சார யுக்தியை ஆங்காங்கே பயன்படுத்தி வருவதைக் காண முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x