Published : 04 Apr 2021 03:15 AM
Last Updated : 04 Apr 2021 03:15 AM

அவதூறு பிரச்சாரம் மூலம் ஆட்சியைப் பிடிக்க கனவு காணும் ஸ்டாலின்: முதல்வர் பழனிசாமி விமர்சனம்

அவதூறு பிரச்சாரம் மூலம் ஆட்சியைப் பிடிக்க ஸ்டாலின் கனவு காண்கிறார் என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மணியை ஆதரித்து ஓமலூரிலும், மேட்டூர் தொகுதி பாமக வேட்பாளர் சதாசிவத்தை ஆதரித்து, மேச்சேரியிலும் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். அவர் போடாத வேடமே இல்லை. இந்த ஆட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சொல்லி அவதூறு பிரச்சாரம் மூலம் ஆட்சியைப் பிடிக்க அவர் கனவு காண்கிறார். அந்தக்கனவு பலிக்காது.

ஸ்டாலினுக்கு என்னைப் பற்றி பேசாவிட்டால் தூக்கம் வராது. 4 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக முதல்வரை யாருக்கும் தெரியாது என்று ஸ்டாலின் கூறினார். எங்கள் ஆட்சி மீது குறைகூற ஏதும் இல்லாததால், இப்போது போகிற இடத்தில் எல்லாம் என்னைப் பற்றி பேசிப்பேசி, மக்களுக்கு என்னை ஸ்டாலின் நன்கு தெரியப்படுத்திவிட்டார். அதற்கு ஸ்டாலினுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

70 வயதாகியும் ஸ்டாலின் சினிமா நடிகர்போல சுற்றி வருகிறார். அவர் தன்னை எம்ஜிஆர் என்று நினைக்கிறார். எம்ஜிஆர் எப்போதும் எம்ஜிஆர் தான். ஆனால், என்ன செய்தாலும் ஸ்டாலின் எப்போதும் ஸ்டாலின் தான்.

அதிமுகவில் நிறைய ஊழல் நடந்ததாக ஸ்டாலின் பச்சைப் பொய் பேசி வருகிறார். ஆனால் இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான். இதன்மூலம் காலத்தால் அழிக்க முடியாத கரும்புள்ளியை திமுக பெற்றுள்ளது. இந்த தேர்தலில் தோற்று விட்டால் அடுத்த தேர்தல் வரை மக்களை ஸ்டாலின் சந்திக்க மாட்டார். மக்கள் பாதிக்கப்படும்போது, மக்களை நேரடியாக சென்று சந்தித்துள்ளேன்.

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்-திமுக அரசு. அப்போது அதிகாரத்தில் இருந்தபோது விட்டு விட்டு, இப்போது ரத்து செய்வேன் என்கிறார்கள். ஜெயலலிதா இருந்த வரையில் நீட் தேர்வு அனுமதிக்கப்படவில்லை. ஆனால், நீதிமன்ற உத்தரவு காரணமாக, நீட் தேர்வு நடத்தப்பட்டாலும், அதனை எதிர்த்து இன்றுவரை போராடுகிறோம்.

இந்த தேர்தலில் அராஜக கட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இது அமைய வேண்டும்.

எங்கள் கூட்டணியில் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் 20 பேர் வாரிசுகளாக வேட்பாளராக உள்ளனர். பல அதிகார மையங்களை வைத்திருக்கும் கட்சி திமுக என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x