

தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் திமுகஎம்.பி.க்களான ஆ.ராசா, தயாநிதி மாறன், பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் அதிசயா, ராஜலட்சுமி ஆகியோர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்தனர்.
அதில் கூறப்பட்டிருந்ததாவது:
கடந்த ஒரு வாரமாக, திமுகவை சேர்ந்த நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி,எம்.பி.க்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் அதிமுக பற்றியும், பெண்மையை இழிவுபடுத்தும் வகையிலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
முதல்வர் பழனிசாமியின் தாயார் பற்றி ஆ.ராசாவும், முன்னாள் அமைச்சர் வளர்மதி பற்றி லியோனியும், பிரதமர் மோடி மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பற்றி தயாநிதி மாறனும் தரக்குறைவாக விமர்சித்து பேசியுள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு விசாரணைக்காக சென்னை காவல் ஆணையரிடம் அனுப்பப்பட்டது.
2 பிரிவுகளில் வழக்கு
இதையடுத்து, கலகம் ஏற்படுத்துதல், ஆபாசமாக பேசுதல் (ஐபிசி 153, 294 பி) ஆகிய 2 பிரிவுகளில் 3 பேர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.