

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுக கூட்டணியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிடுவதால் இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. திமுக சார்பில் கயல்விழி போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யத்தின் சார்லி, அமமுகவின் கலாராணி, நாம் தமிழர் கட்சியின் ரஞ்சிதா, சுயேச்சைகள் 4 பேர் உட்பட மொத்தம் 9 பேர் களத்தில் உள்ளனர். இருப்பினும், திமுக- பாஜக இடையேதான் நேரடிபோட்டி நிலவுகிறது.
இத் தொகுதியில் கவுண்டர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், சிறுபான்மையினர் கணிசமாகவும், இதர சமூகத்தினர் குறிப்பிட்ட சதவீதத்திலும் உள்ளனர்.
1967-க்கு பிறகு நடைபெற்ற தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சம பலத்துடன் தலா 5 முறை, இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட காளிமுத்து வெற்றி பெற்றார்.
தாராபுரம் தொகுதியில் பாஜகவுக்கென கட்சி கட்டமைப்பு வலுவாக இல்லாத நிலையில், அதிமுக-வின் வாக்கு வங்கியை நம்பியே பாஜக வேட்பாளர் களம் இறங்கியுள்ளார். திமுக வேட்பாளர் கயல்விழி புதுமுகம் என்றாலும், திமுகவுக்கென உள்ள உறுதியான வாக்கு வங்கி , காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வாக்குகளை நம்பியுள்ளார்.
முக்கிய பிரச்சினைகள்
தாராபுரத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். அதிநவீன வசதியுடன் கூடிய தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவ மனை ஏற்படுத்த வேண்டும். பலஆண்டுகளுக்கு முன்பே சர்வே எடுத்தும், மாநில அரசின் பங்க ளிப்பு நிதி இல்லாமல் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே திட்டத்தை செயல்படுத்த வேண்டும். திருமூர்த்தி அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரவேண்டும் என்பவை மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
வளர்ச்சிப் பணிகளை பொறுத்த வரை, அமராவதி ஆற்றில் 7 தடுப் பணைகள் கட்டியது, அரசு மருத்துவமனையில் புதிதாக மகப்பேறு பிரிவு, ஐசியூ பிரிவு ஏற்படுத்தியது, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகளை குறிப்பிடலாம்.
எல்.முருகனுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடியும், கயல்விழிக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பிரச்சாரம் செய்துள்ளனர். தொகுதியில் திமுக மற்றும் பாஜகவினர் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். வாகை சூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு தொகுதி மக்களிடம் மட்டுமின்றி, தமிழக மக்களிடமும் ஏற்பட்டுள்ளது.