Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM

உத்திரமேரூரில் திமுக - அதிமுக நேரடி மோதல் : பிரச்சார வியூகத்தால் கலங்கடிக்கும் அமமுக வேட்பாளர்

உத்திரமேரூர்

உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதி கிராமங்களை பெரும்பான்மையாக கொண்டது. உத்திரமேரூர் வட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள கிராமங்கள், உத்திரமேரூர், வாலாஜாபாத் பேரூராட்சிகள் ஆகியவை இந்தத் தொகுதியில் உள்ளன. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள சில பகுதிகளும் இதில் வருகின்றன.

இந்தத் தொகுதி 1977-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை 10 சட்டப்பேரவைத் தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 6-ல் அதிமுகவும், 4-ல் திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. இந்தத் தொகுதியில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 253 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 321 பெண் வாக்காளர்கள், இதரர் 31 பேர் என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 605 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் போட்டியிடுகிறார். திமுகவில் தற்போதைய எம்எல்ஏ க.சுந்தர் போட்டியிடுகிறார். அதிமுகவில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலராக இருந்து சமீபத்தில் வெளியேறிய ஆர்.வி.ரஞ்சித்குமார் அமமுக சார்பிலும், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த ஏ.சூசையப்பர், நாம் தமிழர் கட்சி சார்பில் எஸ்.காமாட்சி உட்பட 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்தத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் க.சுந்தர் தொகுதியில் நன்கு அறிமுகமானவர். இதே தொகுதியைச் சேர்ந்தவர். பலரை பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு பழக்கம் உள்ளவர். காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும், சிறுபான்மையின மக்களின் ஆதரவும் இவருக்கு பலம்.

உத்திரமேரூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவது, புதிய கல்லூரிகள் அமைப்பது, தொகுதிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது போன்ற வாக்குறுதிகளை கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு கிராமத்திலும் நேரடியாக தனக்கு தெரிந்தவர்களை அழைத்துக்கு கொண்டு பிரச்சாரம் செய்யும் யுக்தியை கையாண்டு வருகிறார். இந்தத் தொகுதியில் கல்குவாரிகள் பிரச்சினையை இவர் சரியாக கையாளவில்லை என்பது இவரது பலவீனமாக உளளது.

அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் செய்யாறு மற்றும் பாலாற்றில் தடுப்பணை அமைத்தது, ஒரக்காட்டுப்பேட்டை மேம்பாலம் அமைத்தது உள்ளிட்டவற்றை அதிமுக அரசு செய்ததாகக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். இவர் தெருக்கூத்துக் கலைஞர்களுடன் சென்றும், விவசாய நிலங்களுக்கு நேரடியாகச் சென்று விவசாயிகளை சந்தித்தும் வாக்கு சேகரிக்கும் யுக்தியை பயன்படுத்தி வருகிறார்.

புதிய தடுப்பணைகள் அமைப்பது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த தொழிற்சாலைகளை கொண்டு வருவது உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி பிரச்சாரம் செய்கிறார். கிராமங்கள் இந்த தொகுதியில் அதிகம் என்பதால் பாமகவினரின் களப்பணி இவருக்கு பலமாக உள்ளது.

காஞ்சிபுரம் சட்டப்பேரவையில் பல்வேறு பணிகளை செய்து வந்த இவர், திடீரென்று உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிடுவது பலவீனம். அமமுக வேட்பாளரின் தீவிர களப்பணி அதிமுகவின் வாக்குகளை பிரிக்கக் கூடும் என்பதும் மிகப் பெரிய பலவீனமாக உள்ளது.

அமமுக வேட்பாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் பிரச்சாரத்துக்கு செல்லும் கிராமங்களில் முன் கூட்டியே ஒரு குழு சென்று முன்னேற்பாடு பணிகளை கவனிப்பதுடன், மக்களை சந்திக்கிறது. இதைத் தொடர்ந்து வேட்பாளர் சென்று மக்களை சந்திப்பது, அவர்களுடன் நெருங்கி உறவாடுவது என்ற இவரது பிரச்சாரம் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களையே களங்கடிக்கும் வகையில் உள்ளது. மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் சமத்துவ மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்தத் தொகுதியில் 20 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் அதிமுக-திமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x