

“கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது, பொதுமக்கள் அனைவரும் முகக்கவச அணிவது கட்டாயம். அணியாதவர்களுக்கு அபாரதம் விதிக்கப்படும்” என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா பரவலால் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சம் ஒருபுறம் நிலவி வருகிறது.
மாவட்ட நிர்வாகமும் இந்த விஷயத்தில் கெடுபிடி காட்டத் தொடங்கியிருப்பதால் உள்ளாட்சி அமைப்பினர் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு பழையபடி அபராதம் விதிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
இரு தினங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஏமப்பேர் அருகே நின்று கொண்டு நகருக்குள் இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் வருவோரை நிறுத்தி, ரூ. 200 அபராதத் தொகை வசூலித்தனர். அப்போது கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
முகக்கவசத்திற்கு அபராதம் விதித்த அதே ஏமப்பேர் பகுதியில், அதே நேரத்தில் சிறிய சரக்கு வாகனத்தில் அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றிற்கு ஆண்களும், பெண்களும் நெருக்கமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் எவரும் முகக்கவசம் அணியவில்லை.
இதைச் சுட்டிக்காட்டிய இருசக்கர வாகன ஓட்டிகள், “அங்க பாருங்க, நீங்க சொல்ற அந்த விதிகளை மதிக்காம, கூட்டமா வண்டியில போறாங்க. அவங்களுக்கு தலைக்கு 200 ரூபா தர்றாங்க! நாங்க தன்னந்தனியா ஒழுக்கமா, எங்க தனிப்பட்ட வேலைக்காக போறோம். எங்ககிட்டே இருந்து 200 ரூபா வாங்கிறீங்க! சன்மானம் கொடுக்குறவனுக்கு ஒரு சட்டம்!; சாமானியனுக்கு ஒரு சட்டமா!”ன்னு கேட்க,
அதற்கு பதில் எதுவும் கூறாமல், நகராட்சி ஊழியர்கள் பொறுப்பாக, அபராதத் தொகையை வசூலித்து, ரசீது தந்து கொண்டிருந்தனர்.