Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM

ஆத்தூருக்கு கட்சி தலைவர்கள் வராத நிலையில் தனி ஒருவராக பிரச்சாரத்தில் ஈடுபடும் பா.ம.க. வேட்பாளர்

தென் மாவட்டங்களில் ஒரே தொகுதியாக ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளரை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர்கள் யாரும் பிரச்சாரத்துக்கு வராததால் தனி ஒருவராக போராடி வருகிறார் அக்கட்சியின் வேட்பாளர் திலகபாமா.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமியை எதிர்த்து அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் திலகபாமா போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கலை முடித்துவிட்டு தொடர்ந்து கிராமம் கிராமமாக சென்று தங்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள பாமக கட்சி நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக மாநில தலைவர் கோ.க.மணி என யாரும் இதுவரை ஆத்தூர் தொகுதியில் பாமக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வரவில்லை. இதனால் தனி ஒருவராக வேட்பாளர் திலகபாமா தனது பிரச்சாரத்தை தொடர்ந்து வருகிறார். இவரும் வெளியூர் வேட்பாளர் என்பதால் கூட்டணிக் கட்சியினரும் சற்று தயக்கத்துடனே பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது.

பிரச்சார தொடக்கத்தில் எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி குறித்து நேரடியாக தாக்கி பேசியதால் சில ஊர்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டணிக் கட்சியினரே, தனிமனித தாக்குதல் பிரச்சாரம் வேண்டாம், நமது வாக்குறுதிகளை வலியுறுத்தி வாக்கு கேட்போம் என கேட்டுக்கொண்டதால் பிரச்சார யுக்தியை பாமக வேட்பாளர் மாற்றிக்கொண்டு தனது பிரச்சார பயணத்தை தொடந்து வருகிறார்.

இவருக்கு ஆதரவாக அவர்களது கட்சித் தலைவர்களே வராதது பாமக மட்டுமின்றி கூட்டணிக் கட்சியின ருக்கும் ஏமாற்றத்தையே தந்துள்ளது. கட்சித் தலைமையே பாமக வேட்பாளர் போட்டியிடும் தொகுதியை புறக் கணிக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

செம்பட்டியில் நடந்த அதிமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நிலக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் தேன்மொழி, ஆத்தூர் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா ஆகியோரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பேசினார். இந்த ஒரு பிரச்சாரம் மட்டுமே அவருக்கு ஆறுதல் தருவதாக இருந்தது. தென் மாவட்டங்களில் கால்பதிக்க வேண்டும் என்பதற்காக ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளரை ஆதரித்து அந்த கட்சித் தலைவர்களே பிரச்சாரத்துக்கு வராததால், தனி ஒருவராக தேர்தல் களத்தில் நின்று போராடி வருகிறார் பாமக வேட்பாளர் திலகபாமா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x