

புதிய மற்றும் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தேர்தல் வெற்றியில் இவர்களின் பங்களிப்பு பிரதானமாக இருக்கும். மேலும் இவர்கள் தங்கள் குடும்பங்களை வலியுறுத்தி பாரம்பரிய வாக்குகளை மாற்றும் நிலையையும் ஏற்படுத்தி வரு கின்றனர்.
வாக்காளர்களிடையே பாரம்பரிய கட்சி சார்பு என்ற நிலை கடந்த சில தேர்தல்களாகவே மாறி வருகிறது. குறிப்பாக இவற்றின் சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. காரணம் அவர்களிடம் ஏற்பட்டுள்ள மனமாற்றமும், விழிப்புணர் வும்தான்.
இதனால் கட்சிகளின் செயல்பாடுகள், வேட்பாளர்களின் நடவடிக்கைகள் போன்றவற்றை கவனித்து வாக்களிக்கும் நிலைக்கு பலரும் மாறி உள்ளனர். சமூக வலைதளங்களின் வளர்ச்சி இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும் இளம் வாக்காளர்களின் வாக்குகள் இந்த தேர்தலில் முக்கிய பங்கை வகிக்கும் நிலையில் உள்ளது. எனவே இந்த வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு கட்சிகளும், தலைவர்களும் அவர்கள் சார்ந்த பிரச்சினைகள், தேவைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை நான்கு தொகுதிகளிலும் 11 லட்சத்து 25 ஆயிரத்து 638 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 18 முதல் 19 வயதுடைய புதிய வாக்காளர்கள் 24 ஆயிரத்து 851 பேர் உள்ளனர். 20 முதல் 29 வயது வரை 2 லட்சத்து 24 ஆயிரத்து 915 பேரும் 30 முதல் 39 வயது வரை 2 லட்சத்து 42 ஆயிரத்து 162 பேரும், 40 முதல் 49 வயது வரை 2 லட்சத்து 37 ஆயிரத்து 11 பேரும் உள்ளனர்.
மேலும் 50 முதல் 59 வயது வரை 1 லட்சத்து 91 ஆயிரத்து 451 பேரும், 60 முதல் 69 வயது வரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 671 பேரும், 70 முதல் 79 வயது வரை 62 ஆயிரத்து 52 பேரும், 80 வயதுக்கு மேல் 22 ஆயிரத்து 525 பேரும் உள்ளனர்.
18 முதல் 19 வயது வரை உள்ள புதிய வாக்காளர்களைப் பொறுத்தவரை ஆண்டிபட்டியில் 6 ஆயிரத்து 302 பேரும், பெரியகுளத்தில் 6 ஆயிரத்து 497 பேரும், போடியில் 6 ஆயிரத்து 436 பேரும், கம்பத்தில் 5 ஆயிரத்து 616 பேரும் உள்ளனர்.
மேலும் 20 முதல் 29 வயது வரையிலான வாக்காளர்கள் ஆண்டிபட்டியில் 56 ஆயிரத்து 409 பேரும், பெரியகுளத்தில் 58 ஆயிரத்து 476 பேரும், போடியில் 55 ஆயிரத்து 367 பேரும், கம்பத்தில் 54 ஆயிரத்து 663 பேரும் உள்ளனர்.
இந்த தேர்தலில் இளம் மற்றும் புதிய வாக்காளர்களின் மனோநிலையே வெற்றியைத் தீர்மானிக்கும் தன்மையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை வலியுறுத்தி தான் விரும்பும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவும் கேட்டு வருகின்றனர்.
எனவே இதுவரை வீட்டுப் பெரியவர்களிடம் பொதிந்திருந்த பாரம்பரிய கட்சிசார்புத் தன்மை உடைத்து வேறு கட்சிகளுக்கு வாக்குகள் மாறும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பல தேர்தல்களிலும் தொடர்ந்து வந்த நிரந்தர வாக்குகள் ‘இடம்மாறும் வாக்குகளாக’ மாற வாய்ப்புள் ளது.
எனவே இளையவர்களை குறிவைத்து வேலைவாய்ப்பு, அரசுப்பணி, தொழில், கடனுதவி, திருமண நிதிஉதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கட்சிகள் அறிவித்து வருகின்றன. இருப்பினும் தற்போது தேர்தல் களம் ஐந்து முனை போட்டியை எதிர்கொண்டுள்ளதால் இளையவர்களின் ஆதரவு கணிசமாக பிரிய வாய்ப்பு உள்ளது.
எனவே வெற்றி, தோல்வியில் பெரியளவில் வாக்கு வித்தியாசம் இருக்காது என்ற நிலையே பல தொகுதிகளிலும் உள்ளது. இருப்பினும் தேர்தல் முடிவின் போதுதான் இளைய வாக்காளர்களின் மனோநிலை குறித்த உண்மை விபரம் தெரிய வரும்.