Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM

தேர்தல் காலத்தை முன்னிட்டு குடிநீர் பிரச்சினை ஏற்படாதவாறு செயல்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்: இந்நிலை தொடர பொதுமக்கள் எதிர்பார்ப்பு

குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளில் பிரச்சினை ஏற்பட்டால் பிரச்சாரத்தில் எதிர்ப்பு ஏற்பட்டு தேர்தல் வெற்றியையும் பாதிக்கும் என்பதால் மாவட்டத்தின் அந்தந்த பகுதி உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இவற்றை மும்முரமாக கண்காணித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் இன்று இரவு 7 மணியுடன் நிறைவடைய உள்ளது. தேர்தல் முடிவுகளை பெரும் பாலும் வாக்குப்பதிவுக்கு சில நாட் களுக்கு முன்பு ஏற்படும் மனோநிலையே தீர்மானிக்கிறது. எனவே அனைத்துக் கட்சிகளும் கட்டுப்பாடுகளுடன் இந்த நேரத்தை கடந்துசெல்லும்.

இதற்காக பொதுவெளியில் நடைபெறும் விசேஷ, துக்க வீடுகளில் பங்கேற்பது, சமுதாய மக்களை, நிர்வாகிகளை சந்திப்பது என்று நன்மதிப்பை பெற முயற்சி செய்வர். அதேபோல் மாற்றுக்கட்சிகளின் தவறான செயல்பாடுகளை வெளிப்படுத்துதல் போன்ற நடவடிக்கையிலும் ஈடுபடுவர். இதுபோன்ற செயல்பாடுகளினால் பல வாரங்களாக கஷ்டப்பட்டு பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டியிருந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுவிடுவது உண்டு.

எனவே இந்நாட்களில் அதீத கவனத் துடன் கட்சியினர் நடந்து கொள்வது வழக்கம். இதன் ஒருபகுதியாக வாக்காளர்களுக்கு குடிநீர், மின்சாரம் தடையின்றி கிடைப்பதற்கான முயற்சிகளை உள்ளாட்சி கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு பெரிய திட்டங்களை விட அன்றாட அத்தியாவசியத் தேவைகளான குடிநீர், மின்சாரம், ரேஷன் விநியோகம், சாலை போன்றவைதான் மனமாற்றத்தை ஏற்படுத்தி விடும். எனவே இதுபோன்ற சூழ்நிலையைத் தவி்ர்க்க ஒன்றிய, கிராம உள்ளாட்சி கட்சிப் பிரதிநிதிகள் இப்பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து நிர்வாகிகள் பொறுப்பேற்று உள்ளனர். வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஒன்றியக் கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், மாவட்ட கவுன்சிலர், மாவட்டத் தலைவர் என்று பல்வேறு கட்சியினரும் மும்முரம் காட்டி வருகின்றனர்.

நகரப்பகுதியில் ஏற்கெனவே பொறுப்பு வகித்தவர்கள், அந்தந்த வார்டுகளில் ஆளுமைத்தன்மையுடன் உள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர். இதனால் கடந்த சில வாரங்களாக மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம், மின்சார சப்ளை தொடர்ந்து கொண்டிருக்கிறது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்ற நேரங்களிலும் இதே ஆர்வத்துடன் செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x