

அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஏப்.6-ம் தேதி அத்தொகுதி மக்கள் பதில் சொல்வார்கள் என கரூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.இளங்கோவை ஆதரித்து எலவனூர் பகுதியில் நேற்று முன்தினம் அவர் பேசியது: நான் கடந்த 25 ஆண்டு காலமாக அரசியலில் இருக்கிறேன். எம்எல்ஏ, அமைச்சர் என பல பதவிகளை வகித்துள்ளேன். இதுவரை யாரையும் கடுஞ்சொல் பேசியதில்லை.
தனிப்பட்ட விமர்சனங்களையும் முன் வைத்ததில்லை. ஆனால், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வன்முறையைத் தூண்டும் வகையில் என்னை பற்றி பேசியுள்ளார். இதற்கு நீங்கள் பதிலளிக்கவில்லையே என பலர் கேட்டனர். இதற்கு நான் பதில் சொல்ல தேவையில்லை. வரும் 6-ம் தேதி அரவக்குறிச்சி தொகுதி மக்கள் அண்ணாமலைக்கு பதில் சொல்வார்கள் என்றார். மேலும், கார்வழி, குப்பம், புன்னம், பள்ளபட்டி, ஆண்டிப்பட்டிகோட்டை, ஆத்துமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார்.