Published : 03 Apr 2021 09:06 PM
Last Updated : 03 Apr 2021 09:06 PM

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வர் பழனிசாமியை மறக்க மாட்டோம்: அன்புமணி ராமதாஸ் உருக்கம்  

திருவண்ணாமலை 

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய முதல்வர் பழனிசாமியை மறக்க மாட்டோம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி பேசினார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளர் முரளியை ஆதரித்து, தெள்ளாரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பிரச்சாரத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “அரசியல் வியாபாரம் செய்பவர் திமுக தலைவர் ஸ்டாலின். என்னுடைய அரசியல் என்பது புனிதமான சேவை. மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக நான் அரசியலுக்கு வந்துள்ளேன். குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரசியலுக்கு வந்துள்ளார் ஸ்டாலின்.

ஒரு குடும்பம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவா, திமுகவை தொடங்கினார் அண்ணாதுரை. இப்போது, திமுகவை வழி நடத்துபவர் இந்திக்காரர் பிரசாந்த் கிஷோர். வேட்பாளர் உட்பட யாரை நியமிக்க வேண்டும் என அவர் முடிவு செய்கிறார். கட்சியில் ஸ்டாலின் முடிவு எடுப்பதில்லை. அவருக்கு எதுவும் தெரியாது.

எதிர்க்கட்சித் தலைவராகக் கூட, அவர் சரியாக செயல்படவில்லை. சட்டப்பேரவையில் சட்டையைக் கிழித்ததை தவிர வேறு எதையும் கிழிக்கவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. பெண்களையும், தாய்மையும் மதிக்க தெரியாவர்கள். முதலமைச்சரின் தாயை பற்றி தவறாக பேசிய ஆ.ராசாவை ஸ்டாலின் கண்டிக்கவில்லை. திமுக கூட்டணியில் உள்ள தலைவர்களும் கண்டிக்கவில்லை.

ஆனால், பெண் விடுதலைக்காக போராடுகிறோம் என்பார்கள். ஒரு தாயை பற்றி பேசுபவன் மனிதன் இல்லை. நில அபகரிப்பு, கட்ட பஞ்சாயத்து தலை தூக்கும். வணிகர்கள் மிரட்டப்படுவார்கள்.

10 ஆண்டுகளாக காய்ந்து போய் உள்ளனர். ஆட்சிக்கு வந்தால், அனைத்தையும் மேய்ந்துவிடுவார்கள். ஸ்டாலினுக்கு கொள்ளை அடிக்க மட்டுமே தெரியும்.

ஒரு விவசாயி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும். முதல்வர் பழனிசாமி நன்றாக ஆட்சி செய்கிறார். ஒரு குறையும் இல்லை. பாமக நிறுவனர் ராமதாசின் 40 ஆண்டு போராட்டம், 21 உயிர்களின் தியாகம் ஆகியவற்றால், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைத்து இருக்கிறது. அதனை வழங்கிய முதல்வர் பழனிசாமியை மறக்க முடியாது. மறக்கவும் மாட்டோம்.

வன்னியர்களை போல், பின் தங்கிய பிற சமுதாயத்துக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். அதுதான் சமூக நீதி. அதனை பெற்று தருவேன் என உறுதியாக கூறுகிறேன். நமது கூட்டணியில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. விவசாய கடன் ரத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய முதல்வர் பழனிசாமி, மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும். விவசாயியின் ஆட்சி நடைபெறுகிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x