Published : 03 Apr 2021 19:32 pm

Updated : 03 Apr 2021 19:33 pm

 

Published : 03 Apr 2021 07:32 PM
Last Updated : 03 Apr 2021 07:33 PM

நாளை மாலை 7 மணியுடன் பிரச்சாரம் நிறைவு; வாட்ஸ் அப், ட்விட்டர், முகநூலில் பிரச்சாரம் செய்யக்கூடாது: சென்னை தேர்தல் அலுவலர் உத்தரவு

campaign-ends-april-7-at-7pm-no-campaigning-on-whatsapp-twitter-facebook-social-media-district-election-officer-orders

சென்னை

தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளதால் வெளி மாவட்டத்திலிருந்து பிரச்சாரத்துக்கு அழைத்து வரப்பட்டவர்கள் சென்னையை விட்டு வெளியேறிவிட வேண்டும். யாரும் மண்டபங்களில் தங்கக்கூடாது என்று சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் பிரகாஷ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:


“தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.6 அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஏப்.4 அன்று மாலை 7 மணி முதல் வாக்குப் பதிவுகள் முடிவடையும் வரையில் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 126-ன் கீழ், பல்வேறு தேர்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கீழ்க்காணும் விதிமுறைகளை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

1. தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ கூடாது.

2. யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

3. பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுப்போக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பிரச்சாரம் செய்யக் கூடாது.

இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

4. சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் ஏப் 4 அன்று மாலை 7 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

5. கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பதை ஆய்வு செய்து, வெளியாட்கள் இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

6. வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், ஏப்.4 அன்று மாலை 7 மணி முதல் செயல் திறனற்றதாகிவிடும்.

7. வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.

8. இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரச்சார அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டர் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது. இங்கு எந்தவிதமான உணவுப் பொட்டலங்களும் பரிமாறக் கூடாது.

இந்த முகாம்களில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை உடன் வைத்திருக்க வேண்டும். இந்தப் பிரச்சார அலுவலகத்தில் குற்ற வழக்குகள் தொடர்புடைய நபர்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது”.

இவ்வாறு மாவட்டத் தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.தவறவிடாதீர்!

CampaignEnds April 77pmNo campaigningWhatsAppTwitterFacebookSocial mediaDistrict Election OfficerOrdersஏப்.4 மாலை7 மணியுடன் பிரச்சாரம் நிறைவுவாட்ஸ் அப்ட்விட்டர்முகநூல்சமூக வலைதளங்களில் பிரச்சாரம்செய்யக்கூடாதுமாவட்ட தேர்தல் அலுவலர்உத்தரவு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x