பொங்கல் பண்டிகையை கொண்டாடும் கொரியர்கள்: தமிழர்களின் வழிவந்தவர்களா என ஆராயும் உலகத் தமிழறிஞர்கள்
உலக வரைபடத்தில் கொரியா 3 பக்கங்களிலும் கடலால் சூழ்ந்து, பெரும்பாலும் மலைகளை உள்ளடக்கிய நிலப்பரப்பு உடைய விவசாயத்துக்கு ஏற்பில்லாத நிலத்தைக் கொண்டது. ஆனால், தொழில்நுட்ப சாதனங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களைக் கொண்ட நாடாகவும், பொருளாதார வளமுடைய நாடாகவும் உலக அரங்கில் தற்போது கொரிய நாடுகள் விளங்குகின்றன. இவற்றுக்கு அடிப்படையாக அமைந்தது அந்நாடுகளின் எழுத்து, கல்வி சீர்திருத்தம்தான்.
தற்போது கொரிய மக்களில் 99 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். ஆரம்ப காலத்தில் சீன மொழி பேசிவந்த கொரிய மக்கள், 16-ம் நூற்றாண்டு முதல் ‘ஹங்குல்' எழுத்துவடிவ மொழியை தாய்மொழியாக ஏற்றனர்.
‘ஹங்குல்' எழுத்து முறை வந்த பிறகே, அந்நாட்டினர் சமூக, பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளனர். மொழியை முன்னிறுத்தியே எந்த ஒரு நாடும் முன்னேறும் என்பதற்கு, கொரியா தக்க சான்றாகத் திகழ்கிறது.
இதுகுறித்து காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் சி.சிதம்பரம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தமிழ்மொழியுடனான உறவுகள்
கொரிய மொழியில் உள்ள பல சொற்கள் தமிழ் சாயலில் அமைந்திருக்கின்றன. உரத்தை கொரிய மொழியிலும் உரம் என்றே அழைக்கின்றனர். கண்ணை நுகண் என்றும் மூக்கை கோ என்றும் பல்லை இப்பல் என்றும், புல்லை புல் என்றே குறிப்பிடுகின்றனர். கொஞ்சம் என்பதற்கு சொங்கும் என அழைக்கின்றனர்.
இதனை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கில், கனடாவின் டொரான்டோ நகரை சேர்ந்த ஜூங்நாம் கிம் என்பவர், ‘‘கொரிய மொழியில், பல வார்த்தைகள் தமிழ் சாயலில் இருக்கின்றன’’ என தம் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு, தமிழின் சாயலில் பல கொரிய மொழி வார்த்தைகள் இருப்பதால், கொரியா தெரிந்தவர் எளிதில் தமிழ் கற்க முடியும் என்ற நிலையிருக்கிறது. தமிழ் மொழியில் இருந்து பிறந்ததுதான் கொரிய மொழி எனவும், இதை அங்குள்ள எழுத்து வடிவங்கள் புலப்படுத்துகின்றன எனவும் கொரிய நாட்டு விஞ்ஞானி கண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்-கொரிய பண்பாட்டு உறவு
2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் ரோமானியர்களுடன் வணிகம் செய்து வந்திருந்தனர். அப்போது மேற்கில் ரோமானியப் பேரரசும், கிழக்கில் சீனப் பேரரசும் இருந்திருக்கின்றன. இந்த இரண்டு பேரரசுகளுக்கும் இடையில் தமிழ்ப் பேரரசு இருந்திருக்கிறது. தமிழர்கள் மிகச் சிறந்த கடலோடி களாக இருந்துள்ளனர். 1973- ல் ரோபர்ட் வர்சிங் என்ற உலகப் புகழ்பெற்ற அமெரிக்க அறிஞர், ஏன்சியன்ட் இந்தியா அண்ட் இட் இன்புளூயன்ஸ் இன் மாடர்ன் டைம்ஸ்’ என்ற புத்தகத்தில், சில தமிழ் மன்னர்களிடம் ரோமன் வீரர் கள் பணிபுரிந்தனர் என்ற குறிப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கிறார்.
பாண்டிய நாட்டின் மீன் இலச் சினைகள் கொரியாவில் பயன்படுத் தப்படுகின்றன. சொல்லா எனும் மாவட்டம் கொரியாவில் உள்ளது. இது சோழா எனும் பெயரின் திரிந்த சொல்லாகவே கருத தோன்றுகிறது. இதேபோல், உணவு முறைகளிலும் கொரியாவுக்கும் தமிழுக்கும் தொடர்புள்ளது. தோசை, கொழுக்கட்டை உள் ளிட்ட தமிழர்களின் உணவுகள் அங்கு பிரதான உணவுகளாக உள்ளன. அதேபோல், பெருமாள் கோயிலும் அங்குள்ளது. தமிழர் களின் பழக்கவழக்கங்கள் அங்கு ஏராளமாக பயன்படுத்தப்படு கின்றன. இதுவரை மேற்கொள்ளப் பட்ட ஆய்வின்படி, தமிழர்களின் வழிவந்தவர்களாகவே கொரியர்கள் கருதப்படுகின்றனர். பலர் இதை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் இது பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முறைப்பெண்களை மணக்கும் கொரியர்கள்
கொரியாவில் அத்தை, மாமன், தாய்மாமன் முறைப் பெண்களைத்தான் மணந்துகொள்கிறார்கள். தமிழர் பண்டிகையான பொங்கலை பெரும் விழாவாக அங்கு கொண்டாடுகிறார்கள். சமீபத்தில்தான் சீன உணவின் தாக்கம் அங்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்பு வரை அவர்களின் முழு உணவும் அரிசி சார்ந்து இருந்தது. ஊறுகாய் இல்லாத உணவு அரிது. 1960-கள் வரை அவர்களின் வீடுகள் தமிழர்களின் குடிசைகளைப் போலவே இருந்தன.
இன்றும் கொரியாவில் பெற்றோரை அம்மா, அப்பா என்றே அழைக்கிறார்கள். வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும்போது மாவிலைத் தோரணம் (mango leaves) கட்டுவோம். கொரியாவில் மாங்காய் கிடையாது என்பதால் அங்கு மிளகாயைத் தோரணமாக கட்டுகின்றனர். ஆனால் அதற்குப் பெயர் மாவிலை தோரணம் என்றுதான் அழைக்கின்றனர் என்றார் பேராசிரியர் சி.சிதம்பரம்.
