

நீலகிரி மாவட்டம் உதகை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் மு.போஜராஜனை ஆதரித்து, நடிகை நமீதா இன்று (ஏப். 03) உதகையில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நடிகை நமீதா பிரச்சாரம் செய்தால் கூட்டம் அதிக அளவில் கூடும் என்று பாஜக நிர்வாகிகள் எண்ணி, உதகையில் 5 இடங்களில் பிரச்சாரம் செய்ய முடிவு செய்தனர். முதலில் உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் பிரச்சாரம் மதியம் 1 மணிக்குத் தொடங்கும் என, வாகனத்தின் மூலம் நகரம் முழுவதும் அறிவித்தனர். காவல்துறையினர் காபி ஹவுஸ் சந்திப்பில் பிரச்சாரம் செய்து வந்த நாம் தமிழர் கட்சியினரை அங்கிருந்து செல்ல அறிவுறுத்தினர்.
பாஜக பிரச்சார வாகனம் அப்பகுதிக்கு வந்து அதிமுக உள்ளூர் பேச்சாளர்கள் பேசத் தொடங்கினர். மேலும், கூட்டத்தைச் சேர்க்க கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனால், நடிகை நமீதா வருவதாக அறிவித்தும் அப்பகுதியில் மக்கள் கூடவில்லை.
மதியம் ஒரு மணிக்கு வருவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், 2 மணி நேரமாகியும் கூட்டம் கூடவில்லை எனத் தெரிந்ததும், மதியம் 3 மணிக்கு உதகை காபி ஹவுஸ் பகுதிக்கு நடிகை நமீதா அழைத்து வரப்பட்டார்.
அங்கு பேசிய நமீதா, போஜராஜனுக்கு வாக்களித்தால், நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவுகள் நிஜமாகும் என்றார். "படுக சமுதாய மக்களுக்குப் பழங்குடியினர் பட்டியலில் தங்களைச் சேர்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு இருக்கிறது. அதை எல்லாம் இவர் நிஜமாக்கித் தருவார். இங்கிருக்கும் தேயிலை விவசாயிகள் பயன்பெறும் விதத்தில் தேயிலைக்கு விலை வாங்கிக் கொடுப்பார். உதகையை சர்வதேச சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பார்" எனப் பேசினார்.
மேலும், "அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், 6 சமையல் சிலிண்டர்கள் இலவசம். உங்க ஃபேவரைட் பிரியாணி செய்து சாப்பிடுங்கள். மாதந்தோறும் குடும்பப் பெண்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும். இலவச கேபிள் இணைப்பு வழங்கப்படும். இலவசமாக இடம் மற்றும் வீடுகள் கட்டித் தரப்படும். இலவசமாக வாஷிங் மிஷின் வழங்கப்படும்.
மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் உங்கள் வீடு தேடி வரும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ரேஷன் பொருட்கள் உங்கள் வீடு தேடி வரும். முதியோர்களுக்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும். பெண் குழந்தைகளுக்காக செல்வ மகள் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.
ஆனால், கூட்டத்தினரிடம் 'ரெஸ்பான்ஸ்' இல்லாததால் சுமார் 5 நிமிடம் மட்டுமே பேசிவிட்டுக் கிளம்பினார்.