

சேப்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளரிடம் லஞ்சம் கேட்ட புகாரில் நுண்ணறிவுப் பிரிவு காவலரை சஸ்பெண்ட் செய்து காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்கான சின்னத்தை பொதுமக்களிடம் கொண்டுசேர்க்க தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வதற்காக அவர்களது பிரச்சார வாகன எண், எத்தனை வாகனங்கள் பிரச்சாரம் செய்கின்றன என்கிற விவரத்தைத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோன்று தொகுதியில் எங்கெங்கு பிரச்சாரம் செய்வது என்பது குறித்து தேர்தல் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
அவர் அதுகுறித்து காவல்துறைக்கு அனுமதி அளிக்க பரிந்துரைப்பார். அவ்வாறு பரிந்துரைக்கும் மனுக்கள் உடனடியாகத் தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என வேட்பாளர்கள் விரும்புவார்கள். காவல்துறை அனுமதி கிடைத்த தகவல், தேர்தல் அலுவலகத்துக்குச் செல்லும் முன் தங்களுக்குத் தெரிந்தால் திட்டமிடுதலுக்கு எளிதாக இருக்கும் என வேட்பாளர்கள் விரும்புவர்.
இதைப் பயன்படுத்திக் கொண்டு காசு பார்க்க நினைத்த சென்னை ராயப்பேட்டை நுண்ணறிவுப் பிரிவு (லெவல் 2) காவலர் குணசேகரன் என்பவர், சுயேச்சை வேட்பாளர் ஒருவரை அணுகி உங்கள் பிரச்சாரம் குறித்த அனுமதி விண்ணப்பத்தை விரைவாக முடித்துத் தருகிறேன் என்று பேசியுள்ளார். திமுக வேட்பாளர் உதயநிதி, பாமக வேட்பாளர் கஸ்ஸாலி உள்ளிட்ட 26 வேட்பாளர்கள் சேப்பாக்கம் தொகுதியில் மோதுகின்றனர்.
இதனால் டிமாண்ட் அதிகம் இருக்கும் என்பதால் அதைப் பயன்படுத்தி, பணம் பார்க்க நினைத்துள்ளார் காவலர். ஆனால், சுயேச்சை வேட்பாளர் அதைக் கண்டுகொள்ளாமல் விட, திரும்பத் திரும்ப போன் செய்து, ''ஏதாவது கவனியுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் கேட்ட நேரம் கிடைக்காது'' என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த தகவல் வெளியில் பரவியதை அடுத்து அந்தக் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து சுயேச்சை வேட்பாளர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன், புகார் உண்மை எனத் தெரியவந்ததால் நுண்ணறிவுப் பிரிவு காவலரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.