Published : 03 Apr 2021 05:23 PM
Last Updated : 03 Apr 2021 05:23 PM

விழி பிதுங்கும் வாக்காளர்கள்: என்னடா இது விராலிமலைக்கு வந்த சோதனை? சென்டிமென்ட்டை டச் பண்ணும் வேட்பாளர்கள்

சென்னை

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களைக் கவர பல வகைகளில் பிரச்சாரம் செய்து பார்த்துள்ளோம். இந்தத் தேர்தலில் பாலிடாலைக் கையில் வைத்து தற்கொலை செய்துகொள்வேன் என்று வாக்காளர்களை யாரும் மிரட்டவில்லை. மற்றபடி அவர்கள் ஆழ்மனதைத் தொட அத்தனை சென்டிமென்ட் அம்சங்களையும் பயன்படுத்துகிறார்கள் வேட்பாளர்கள். அதிலும் விராலிமலை தொகுதி வாக்காளர்கள் திமுக, அதிமுக வேட்பாளர்களின் அழுகாச்சி பிரச்சாரத்தால் அரண்டுபோய் உள்ளனர்.

தேர்தல் பல விசித்திரமான பிரச்சாரங்களை இந்த முறை கண்டுள்ளது. பல களேபரங்களையும், நகைச்சுவையையும், நவரசம் கலந்த பிரச்சாரத்தையும் இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் பார்க்கின்றனர்.

என்னம்மா இப்படி இருக்கீங்களேம்மா, பெண்கள் என்றால் எட்டு மாதிரி இடுப்பு இருக்க வேண்டும் என்று ஒரு கொபசெ பிரச்சாரத்தில் பேச, அது அவர் கட்சிக்கு சங்கடத்தைத் தர பலரும் கண்டித்தார்கள். அது அடங்குவதற்குள் பிறப்பு குறித்த ஒப்பீட்டை அதே கட்சியைச் சேர்ந்த ஒருவர் பேச, அதுவும் விஸ்வரூபம் எடுக்க, என் தாயாரைப் பற்றிப் பேசிட்டாங்க என்று எதிரணி கண்கலங்க, தன்னிலை விளக்கம் கொடுத்து மன்னிப்பு கேட்ட சம்பவமும் நடந்தது.

இதுதான் இப்படி என்றால், ''ஆட்சிக்கு வந்த மறுநாளே மணலை அள்ளு, தடுக்குற அதிகாரி இருக்கமாட்டார்'' என்று ஒரு வேட்பாளர் பேச, விஷயம் விவகாரமானது. அந்த வேட்பாளரை விமர்சிக்கிறேன் என்று விஆர்எஸ் போலீஸ் அதிகாரி 'சிங்கம்' பட சூர்யா மாதிரி, ''தூக்கிப் போட்டு மிதிச்சேன்னா பல்லுகில்லெல்லாம் எகிறிடும். எனக்குப் பக்கத்து மாநிலத்தில வேற முகம் இருக்கு'' என்று மிரட்டினார். “தம்பி கை வெச்சுதான் பாரேன்” என்று அவருக்கு எதிர்க் கட்சியின் மகளிரணிச் செயலாளர் எதிர் சவால் விட, இப்படியெல்லாம் திரைப்படத்துக்கே உரிய விறுவிறுப்பு குறையாமல் இருக்கே என்று சிந்திக்கும் வேளையில், வீரமானது மட்டுமல்ல குணச்சித்திரமும் கூட உண்டு என்கின்றனர் ஒரு தொகுதி வாக்காளர்கள்.

அழுகாச்சி காவியமாக இரண்டு முன்னணிக் கட்சி வேட்பாளர்கள் பேசிய பேச்சுதான் இதில் ஹைலைட். அது எந்தத் தொகுதி என்று பார்த்தால் விராலிமலைதான். அட அது அமைச்சர் போட்டியிடுகிற தொகுதிதானே என்று கேட்டால் ஆமாம், கரோனாவில் செய்தியாளர்கள் எப்படிக் கேள்வி கேட்டாலும், எந்த பால் போட்டாலும் சிக்ஸர், பவுண்டரியும் அடிச்சாரே, அவரேதான் போட்டியிடுகிறார். அமைச்சர் விஜயபாஸ்கர்தான் அந்த வேட்பாளர்.

அவரை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன். இரண்டு பேரின் சென்டிமென்ட் பிரச்சாரத்தைப் பார்த்துதான் தற்போது விராலிமலை வாக்காளர்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

''2 முறை தோற்றுவிட்டேன், விஜயபாஸ்கருக்கு அப்பா, அண்ணன் எல்லாம் இருக்காங்க. எனக்கு யாரு இருக்காங்க. நீங்கதான் என் சொந்தம். எனக்கு இது கடைசித் தேர்தல்'' என்று பழனியப்பன் போகுமிடமெல்லாம் கட்சித் துண்டை வைத்து கண்களைத் துடைத்தபடி பேச, மக்கள் கலங்கித்தான் போனார்கள்.

இது வேலைக்கு ஆகாது. நாமும் சென்டிமென்ட்டில் இறங்க வேண்டியதுதான் என்று அமைச்சர் விஜயபாஸ்கரும் பதிலுக்கு இறங்கினார். ''எனக்கு சுகர், ரத்தக்கொதிப்பு, தலைசுற்றல், மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளன. காலை நேரத்தில் உணவு அருந்திவிட்டு, மதியம் ஒரு மணி நேரம் தூங்கி காலையில் உடற்பயிற்சி செய்வதற்குக் கூட முடியாமல் உழைக்கிறேன்.

உங்களிடம் கண்ணீர் சிந்தமாட்டேன். மாறாக, வியர்வையையும், ரத்தத்தையும் சிந்தி உழைப்பேன். சிலர் உங்கள் கையைப் பிடிப்பார்கள். சிலர் உங்கள் காலைப் பிடிப்பார்கள். சிலர் வரும்போதே கிளிசிரின் ஊற்றிக்கொண்டு வந்து அழுகிற மாதிரி ஆக்‌ஷன் காட்டுவார்கள். அதை எல்லாம் நம்பாதீர்கள்.

5 வருடங்களுக்கு ஒரு முறை, பத்து நாளா ஓட்டு மட்டும் கேட்டுட்டுப் போனவர், ஓட்டு போடவில்லை என்றால் எனக்கு ஏதாவது ஆகிவிடும் என்று அழுகிறார் என்றால், 10 வருடங்களாக இந்தத் தொகுதி மக்களுக்காக மாடாக உழைத்து, ஓடாகத் தேய்ந்து, உழைத்துக்கொண்டே இருக்கிறேன். கரோனா காலத்தில் ஓடோடி உழைத்ததால் எனது எடை ஏழரை கிலோ குறைந்துவிட்டது” என்று அமைச்சர் விஜய்பாஸ்கர் கண்கலங்கினார்.

மற்ற தொகுதிகளில் ஆட்டம் பாட்டத்துடன் பிரச்சாரம் என்றால் விராலிமலையில் அழுகாச்சியுடன் நடக்கும் பிரச்சாரத்தைப் பார்க்கிறார்கள் வாக்காளர்கள். 'இயேசு நாதர் சிலுவையைச் சுமந்ததுபோல, விராலிமலை தொகுதியை நான் சுமந்து கொண்டிருக்கிறேன். ஏசுநாதர் எனக்குக் கருணை காட்டுவார்' என்று அமைச்சர் பேச, இதற்கும் கீழே இறங்கினால் மட்டுமே மக்களின் அபிமானத்தைப் பெற முடியும் என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன்.

''2 முறை போட்டியிட்டு அனைத்தையும் இழந்துவிட்டேன். சகோதர சகோதரிகளே, என் தொகுதியைச் சேர்ந்த தாய்மார்களே, நான் அப்பாமாரா நினைக்கிற வாக்காளர்களே. கட்சி எனக்கு இந்தத் தேர்தலில் கடைசி வாய்ப்பைத் தந்துள்ளது.

எனக்கு இது இறுதித் தேர்தல். எனக்கு ஒரே ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். நான் சத்தியமாக ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்க மாட்டேன். எனக்கு இந்த ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என்று உங்கள் காலைப் பிடித்துக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று பழனியப்பன் பேசும்போதே கண்கலங்கி அழுகிறார்.

— DMK Pudukkottai திமுக புதுக்கோட்டை (@DMKPudukottai) April 2, 2021

அப்போது பின்னணியில், தானானே பாணியில் அம்மா சென்டிமென்ட் இசை ஒலிக்க, கண்கலங்கியபடி கட்சித்துண்டால் கண்களைத் துடைத்துக்கொள்கிறார். அந்தக் காணொலி தற்போது விராலிமலை தாண்டி தமிழகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

திமுக, அதிமுக வேட்பாளர்கள் அழுவதைப் பார்த்து விராலிமலை மக்கள் விழிபிதுங்கி யாருக்கு வாக்களிப்பதென்பதில் தெளிவில்லாமல் குழம்பிப் போய் கிடக்கிறார்கள் என்பதே தற்போதைய நிலவரம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x