வேதா நிலைய நிலத்தைக் கையகப்படுத்தியதை எதிர்த்து வழக்குகள்; உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன், வேதா நிலையம் இல்லத்தின் நிலம் கையகப்படுத்தியதை எதிர்த்தும், அதற்கு இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை அவரது நினைவு இல்லமாக மாற்ற அரசு முடிவெடுத்து அதைக் கையகப்படுத்தி, அதற்கான தொகையை அமர்வு நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளது.

வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் வழக்குத் தொடர்ந்தார். வீட்டுக்கு 67 கோடியே 90 லட்ச ரூபாய் அளவுக்கு இழப்பீடு நிர்ணயித்து, அந்தத் தொகையை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் அதிகாரி செலுத்தியதை எதிர்த்து ஜெ.தீபா வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகளின் விசாரணை நீதிபதி என்.சேஷசாயி முன்பு நடைபெற்று வந்தது.

தீபா மற்றும் தீபக் தரப்பில் ஜெயலலிதாவுக்கு ரத்த முறை நேரடி வாரிசுகள் இல்லாததால், அவரது அண்ணன் பிள்ளைகளான தங்களை வாரிசுகளாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும், அவர் வாழ்ந்த இடத்தை புனிதமாகக் கருதி முறையாகப் பராமரிக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், தங்களின் கருத்துகளைக் கேட்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நிலத்தைக் கையகப்படுத்த ஒப்புதலே தெரிவிக்காத நிலையில், அந்த நிலத்தை மதிப்பீடு செய்தும், அசையும் சொத்துகளை முறையாக மதிப்பீடு செய்யாமலும் 68 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில் வேதா நிலையத்தைக் கையகப்படுத்தும் முன்பே அனைத்துத் தரப்பு கருத்துகளையும் கேட்டறிந்ததாகவும், பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தி நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கையைக் கண்டிப்பாகப் பாராட்டி இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட விதத்திலும் பல்வேறு பிரச்சினைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. ஒருவர் குடியிருந்த வீட்டை நினைவில்லமாக மாற்ற சுற்றுச்சூழல் சான்றிதழ் எதுவும் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சேஷசாயி, இருவரின் வழக்குகளின் மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in