

பரஸ்பர நிதி திட்டங்களைக் கைவிட்டதன் மூலம் ரூ.28 ஆயிரம் கோடி மோசடி செய்த தனியார் நிறுவனத்திற்கு எதிரான வழக்கைக் கண்காணிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம், இந்தியாவில் பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்) திட்டங்களை வழங்கி வந்தது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இந்த பரஸ்பர நிதிய திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், கரோனா பாதிப்பைக் காரணம் காட்டி, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், ஆறு பரஸ்பர நிதிய திட்டங்களை முடித்துக் கொண்டதாக 2020 ஏப்ரல் மாதம் அறிவித்தது. இதன் மூலம், நாடு முழுவதும் 3 லட்சத்து 15 ஆயிரத்து 621 முதலீட்டாளர்களிடம் இருந்து 28 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாகக் கூறி, கோவையைச் சேர்ந்த பிரேம்நாத் சங்கர் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், பொருளாதார குற்றப் பிரிவினர், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கக் கோரி பிரேம்நாத் சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், மோசடி தொடர்பாக, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யவில்லை எனவும், பொருளாதார குற்றப்பிரிவு தொடங்கியது முதல் எத்தனை வழக்குகள் பதியப்பட்டன, எத்தனை வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளன என அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
முதலீட்டாளர்களின் நலன் காக்க, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக போலீஸில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவில் பொருளாதார விவகாரங்கள், சந்தை நிலவரங்கள் குறித்த பயிற்சி பெற்ற அதிகாரிகளைப் பணியமர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழக பொருளாதார குற்றப் பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர்களை நியமிப்பது குறித்து ஆலோசனைகளை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி, தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.