Last Updated : 03 Apr, 2021 03:00 PM

 

Published : 03 Apr 2021 03:00 PM
Last Updated : 03 Apr 2021 03:00 PM

திமுக கூட்டணி 180 இடங்களுக்கு மேல் வென்றால்தான் பாஜகவால் வெற்றியைத் திருட முடியாது; ப.சிதம்பரம் பேட்டி

திமுக கூட்டணி 180 இடங்களுக்கு மேல் வென்றால்தான் பாஜகவால் வெற்றியைத் திருட முடியாது என்றும், ஏப்.6-க்குப் பிறகு போலீஸாரைக் காட்டிலும், நாங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கண்காணிப்போம் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''மோடி, அமித் ஷா, நட்டா என பாஜக தலைவர்கள் பலரும் கடைசி நேரத்தில் தமிழகத்திற்குப் படையெடுக்கின்றனர். அவர்கள் வருகையை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். அவர்கள் பேசப் பேச, தமிழக மக்கள் அவர்களின் உண்மை நிலையைப் புரிந்து கொள்வார்கள். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தவுடன் கலவரம் வெடிக்கிறது.

மோடி வந்தவுடன் ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை நடக்கிறது. இது பாஜவுக்குக் கைவந்த கலை. வருமான வரித்துறையினர் சோதனையில் பணம் கிடைக்கவில்லை, ஆவணம்தான் கிடைத்தது என்றால் அது எவ்வளவு மோசமான நடவடிக்கை. பாஜக, அதிமுகவினர் வீடுகளில் சோதனை கிடையாது. தமிழகத்தில் அனைத்து ஐடி சோதனைகளும் ஒரே திசையைச் சுட்டிக்காட்டி உள்ளன.

திமுக கூட்டணி 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால்தான், பாஜகவால் வெற்றியைத் திருட முடியாது. பெண்கள் நலன் பற்றிப் பேச அருகதை அற்ற கட்சி பாஜக. இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பாஜகவிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டனர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் தமிழக அரசியலில் மீண்டும் தன்மானம் உயரும். தமிழகத்திற்கு 14, 15-வது நிதிக்குழு பரிந்துரைந்த தொகையில் மத்திய அரசு பாக்கி வைத்துள்ளதாகச் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓபிஎஸ் பேசுகிறார். ஆனால், மேடையில் அனைத்தும் வந்துவிட்டது என்கிறார். அப்படியென்றால் சட்டப்பேரவையில் பேசியது பொய்யா?

தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதுதான் எங்களுக்குத் தெரியும். ஆனால், பாஜக கற்றுத் தரும் பாடம் தேர்தல் திருட்டு. அது எங்களுக்குத் தெரியாது. கற்றுக்கொள்ளவும் மாட்டோம். ரஜினிக்கு விருது கொடுத்தது மகிழ்ச்சி. பல ஆண்டுக்கு முன்பே இதைக் கொடுத்திருக்க வேண்டும். உள்ளடி வேலை அதிகமாக நடப்பது பாஜக, அதிமுக கூட்டணியில்தான். எங்கள் கட்சியில் உள்ளடி வேலை கிடையாது. உள்ளடி வேலை எனக் கூறுவது கற்பனை.

ஏப்.6-க்குப் பிறகு போலீஸாரைக் காட்டிலும், நாங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கண்காணிப்போம். தேர்தல் ஆணையம் முழு சுதந்திரத்துடன் செயல்படுகிறது என்று சொல்ல முடியாது. மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான கட்சி வெல்லும்.''

இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x