தேர்தல் விதிமீறல்: குஷ்பு மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு

தேர்தல் விதிமீறல்: குஷ்பு மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு
Updated on
1 min read

தேர்தல் விதியை மீறி வழிபாட்டுத் தலம் அருகே வாக்குச் சேகரித்த பாஜக வேட்பாளர் குஷ்பு மீது கோடம்பாக்கம் போலீஸார் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. வழிபாட்டுத் தலங்கள், சர்ச்சைக்குரிய இடங்களில் பிரச்சாரம் செய்யக்கூடாது. மத, இன,சமூக துவேஷம், தனிப்பட்ட தாக்குதல், மிரட்டல், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பிரச்சாரம், அனுமதிக்கப்படாத இடத்தில் பிரச்சாரம் செய்யக்கூடாது என விதிமுறைகள் உள்ளன.

இதுதவிர கரோனா பேரிடர் விதி உள்ளது. ஆனால், அதை யாரும் கண்டுகொள்வதில்லை. பொதுப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் பிரச்சாரம் செய்யுங்கள் என உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஆனாலும், அதை யாரும் மதிப்பதில்லை. இந்நிலையில் வேட்பாளர்கள் விதியை மீறிப் பிரச்சாரம் செய்வது, சர்ச்சைப் பேச்சு, பணப் பட்டுவாடா, செலவு உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் தொகுதியில் வலம் வருவார்கள். இதில் விதியை மீறும் வேட்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்.

இரண்டு நாட்களுக்கு முன் திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர் ஆ.ராசா சர்ச்சைப் பேச்சு காரணமாக அவருக்கு 48 மணி நேரத் தடையைத் தேர்தல் ஆணையம் விதித்தது. போலீஸ் வழக்குப் பதிவும் செய்தது. அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை கரூர் வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு பகிரங்க மிரட்டல் விடுத்ததற்கு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதேபோன்று நேற்று மதியம் கோடம்பாக்கம் அருகே விதியை மீறி வழிபாட்டுத் தலம் அருகே பிரச்சாரம் செய்ததாக ஆயிரம் விளக்கு பாஜக வேட்பாளர் குஷ்பு மீது கோடம்பாக்கம் போலீஸார் ஐபிசி பிரிவு 143 (சட்டவிரோதமாக கூடுதல்), 188 (அரசு அதிகாரி உத்தரவுக்கு பணிய மறுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in