

ஸ்டாலின் தமிழகத்தை மட்டும் மீட்டெடுக்க வரவில்லை. மத்தியில் அடகு வைக்கப்பட்ட அதிமுகவையும் மீட்டெடுத்து அவர்களிடம் ஒப்படைக்கத்தான் வருகிறார் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அத்தொகுதி திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரிய கருப்பனையும், காரைக்குடியில் அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியையும் ஆதரித்து வீரமணி நேற்று இரவு பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசும்போது, ''எனக்கு உயிர் முக்கியம் இல்லை. தமிழகத்தைக் காப்பாற்ற, உரிமையை மீட்டெடுக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். இந்த முறை மக்கள் ஏமாற மாட்டார்கள். அதிமுகவுக்கு மடியில் கனம். அதனால் வழியில் பயம். அதிமுகவை இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் பாஜவிடம் அடகு வைத்துவிட்டனர். ஸ்டாலின் தமிழகத்தை மட்டும் மீட்டெடுக்க வரவில்லை. மத்தியில் அடகு வைக்கப்பட்ட அதிமுகவையும் மீட்டெடுத்து அவர்களிடம் ஒப்படைக்கத்தான் வருகிறார். இல்லையென்றால் அதிமுக காணாமல் போய்விடும்.
மோடிதான் அதிமுக தலைவராகச் செயல்படுகிறார். கட்சியையும், ஆட்சியையும் மோடிதான் காப்பாற்றுகிறார் என்று கூறுவது வெட்கம். வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பிரச்சாரத்திற்கு வருவதால் எங்களுக்கு வேலை சுலபமாகிவிட்டது. பாஜகவினர் அவர்களின் பெருமையைச் சொல்லி வாக்குக் கேட்க முடியாததால், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி வாக்குக் கேட்கின்றனர்.
அடிமையாக இருக்கும் அதிமுகவிற்கு, தமிழக உரிமைகளைப் பற்றித் தெரியாது. இதை மீட்க திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்'' என்று கி.வீரமணி பேசினார்.