

திமுக ஆட்சி அமைந்தவுடன் ஊழல் சிறப்பு நீதிமன்றத்தில் முதல் வழக்காக வனத்துறையில் ஊழல்கள் குறித்து அமைச்சர் சீனிவாசன் மீது விசாரணை நடத்தப்படும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
”பிரதமர் என்ற பதவிக்கு தகுந்தாற்போல் பிரதமர் மோடி மதுரை கூட்டத்தில் பேசவில்லை. தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தொழில் வளம் பெருகும் தொழில் பூங்கா அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை கண்டிப்பாக அமைக்கப்படும் போன்ற வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். அவர் ஆட்சிக்கு வந்து ஏழு வருடங்கள் ஆகிறது இந்த ஏழு வருட காலத்தில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு எந்த ஆக்கப்பூர்வமான திட்டத்தையும் கொண்டு வரவில்லை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி இரண்டு வருடங்கள் ஆகிறது.
ஆனால் இதுவரை ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை மத்திய அரசு. பாஜகவினரால் தான் தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர், எதிர்கட்சி வேட்பாளரை ரவுடி மாதிரி பேசி மிரட்டியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் ஊர்வலத்தின் போது கடை மற்றும் ஆட்டோக்களை பாஜகவினர் கல் வீசி தாக்கியுள்ளனர். தேர்தல் நேரத்தில் எதிர்க் கட்சித் தலைவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தி எதிர்க்கட்சியினரின் பிரச்சாரத்தை முடுக்கிவிடலாம் எனவும், அவர்கள் மீது சமூகத்தில் அவப்பெயரை உருவாக்கலாம் என்ற நோக்கத்தோடும் மத்திய அரசு செயல்படுகிறது.
தமிழகத்தில் பாஜக- அதிமுக கூட்டணி படுதோல்வி அடையும். அதிமுகவினர் போட்டியிடும் தொகுதிகளில் பணப்பட்டுவாடா அதிக அளவில் உள்ளது அதை ஏன் தடுக்கவில்லை. இதனை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு துப்பு கிடையாது. திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் வேலையாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் செய்த ஊழல் குறித்து தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதில் முதல் வழக்காக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது, வனத்துறையில் நடந்த ஊழல்கள் குறித்து வழக்கு பதிவு செய்யப்படும். தேர்தல் தேதி நெருங்க நெருங்க தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியினருக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் இருப்பதாக கூட தெரியவில்லை. பாஜக ஆட்சியில் இருக்கும் வரைக்கும் எந்த ஒரு ஆணையமும் நடுநிலையோடு செயல்பட முடியாது. எல்லாவற்றையும் ஆட்டி வைக்க கூடிய பணிகளை செய்து கொண்டிருக்கின்றனர்” என்றார்.