கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக வழக்கு: அரசு, தனியார் மருத்துவமனை பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக வழக்கு: அரசு, தனியார் மருத்துவமனை பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

கரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதலாக வசூலித்த புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு, அமைந்தகரை தனியார் மருத்துவமனை, தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “கரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதி அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் என் தந்தை குமாரை அனுமதித்து வெவ்வேறு தேதிகளில் 4 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் செலுத்திய நிலையிலும், உரிய சிகிச்சை வழங்காததால் ஆகஸ்ட் 3ஆம் தேதி இறந்துவிட்டார்.

அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் நாளொன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய்தான் வசூலிக்க வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், எந்த விதிகளையும் பின்பற்றாமல் அதிக கட்டணம் வசூலித்ததோடு உடலை ஒப்படைக்க வேண்டுமென்றால் மீண்டும் 2 லட்சத்து 44 ஆயிரம் செலுத்த வேண்டுமென நிர்பந்தப்படுத்தி மொத்தமாக 10 நாட்கள் சிகிச்சைக்கு 7 லட்சத்து 2 ஆயிரத்து 562 ரூபாய் வசூலித்தார்கள்.

இதுதவிர என் தந்தையின் மருத்துவச் செலவை இன்சூரன்ஸ் மூலம் பெற, காப்பீட்டு நிறுவனத்தில் கோர ஏதுவாக மருத்துவ விவரங்களைக் கேட்ட நிலையில், எனது தந்தையின் மருத்துவ விவரங்களுக்கு பதிலாக வேறு ஒருவரின் சிகிச்சை விவரங்களை வழங்கினர். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர்.

சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதியே தமிழக சுகாதாரத் துறை, மாவட்ட ஆட்சியர், இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக வசூலித்த தொகையை திரும்பத் தர உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன், அரசுத் தரப்பில் வி.சண்முகசுந்தரம் ஆகியோர் ஆஜரானார்கள்.

அப்போது வழக்கு குறித்து தமிழக அரசு, சென்னை மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை, தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in