Published : 03 Apr 2021 01:02 PM
Last Updated : 03 Apr 2021 01:02 PM

பிரதமரின் பேச்சு வடிவேல் காமெடிபோல் உள்ளது: ஸ்டாலின் விமர்சனம்

''எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் வருவது மட்டுமல்ல, சிறப்பாக இருக்கும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். தமிழ்நாட்டு மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா? 15 மாநிலங்களில் எய்ம்ஸ் உருவாக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். மற்ற எல்லா மாநிலங்களிலும் வேலையைத் தொடங்கிவிட்டீர்கள். நிதி ஒதுக்கிவிட்டீர்கள். ஆனால், இதுவரைக்கும் தமிழ்நாட்டில் நிதி ஒதுக்கவில்லை. ஆனால், சிறப்பாகச் செய்வோம் என்று சொல்கிறீர்களே எப்படி?'' என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

வடலூரில் நேற்று மாலை தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

“என்னுடைய மகள் வீட்டில் இன்றைக்கு சோதனை நடத்தினார்கள். நாளைக்கு என் வீட்டில் நடக்கும். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நீங்கள் சோதனையைத் தொடர்ந்து நடத்துங்கள். அப்போதுதான் திமுக இன்னும் வலுப்பெறும். திமுக இன்னும் உணர்ச்சி பெறும். நாங்கள் என்ன அதிமுகவா உங்கள் சோதனையைப் பார்த்துப் பயந்து மூலையில் உட்கார்ந்து கொள்வதற்கு?

வருமான வரித்துறை சோதனை என்றால் என்ன தெரியுமா? வருமானத்துக்கு மீறி சொத்துச் சேர்த்திருந்தால், அதைக் கணக்கில் காட்டாமல் இருந்தால் சோதனை செய்ய வேண்டும். ஆனால் அவர்கள், தேர்தலுக்காக ஏதோ பணம் பதுக்கி வைத்திருப்பதாக எங்களுக்குச் செய்தி கிடைத்தது. அதனால் வந்தோம் என்று இறுதியாகச் சொல்லப் போகிறார்கள். இதுவரைக்கும் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நன்றாகத் தேடுங்கள். அதைத்தான் செய்தியாகச் சொல்லப் போகிறார்கள்.

தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் கருத்துக் கணிப்புகள் எல்லாம், திமுகதான் மாபெரும் வெற்றி பெறப் போகிறது என்று செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதைத் தாங்க முடியவில்லை. அவர்களுக்கு எரிச்சல் வந்துவிட்டது. ஆத்திரம் வந்துவிட்டது. பொறாமை வந்துவிட்டது. எப்படியாவது ஐந்தாறு சீட்டாவது வென்றுவிடலாம் என்று பாஜக நினைத்துக் கொண்டிருக்கிறது. நான் சொல்கிறேன், நீங்கள் ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாது. மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

வருமான வரித்துறை சோதனை என்றால் கணக்கு வழக்கு தவறாக வைத்திருந்தால், ஒரு மாதத்திற்கு முன்பு சோதனை செய்திருக்க வேண்டும். இல்லை என்றால், தேர்தல் முடிந்த பிறகு செய்தால் நாங்கள் வரவேற்கிறோம். அது எங்கள் கடமை. வருமான வரித்துறையை ஏமாற்றினால் அதற்குரிய தண்டனை இருக்கிறது. அதை நான் இல்லை என்று சொல்லவில்லை.

மோடி, பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுச் சென்றிருக்கிறார். ஏற்கெனவே தாராபுரத்தில் வந்து பேசி விட்டுச் சென்றிருக்கிறார். இப்போது மதுரையில் இன்றைக்குப். பேசிவிட்டு சென்றிருக்கிறார். நான் தாராபுரத்தில் பேசிவிட்டுச் சென்றபோது ஒரு கேள்வியை அவரிடம் கேட்டேன்.

பிரதமர் மோடி அவர்களே, 2015-ஆம் ஆண்டு மத்திய அரசின் சார்பில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்தீர்கள். அதற்குப் பிறகு நான்கு வருடம் கழித்து 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது மக்களை ஏமாற்றுவதற்காக அடிக்கல் நாட்டு விழாவை நடத்தினீர்கள். ஒரு செங்கல் வைத்துவிட்டுச் சென்றுவிட்டீர்கள். இன்றைக்கு அந்தச் செங்கல்லையும் எடுத்துக்கொண்டு தம்பி உதயநிதி ஊர் ஊராகச் சென்று காட்டிக் கொண்டிருக்கிறார்.

அவர் இன்றைக்கு என்ன பேசுகிறார் தெரியுமா? எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் வருவது மட்டுமல்ல, சிறப்பாக இருக்கும் என்று பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா? 15 மாநிலங்களில் எய்ம்ஸ் உருவாக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். மற்ற எல்லா மாநிலங்களிலும் வேலையைத் தொடங்கிவிட்டீர்கள்.

அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கிவிட்டீர்கள். ஆனால், இதுவரைக்கும் தமிழ்நாட்டில் நிதி ஒதுக்கவில்லை. ஆனால் சிறப்பாகச் செய்வோம் என்று சொல்கிறீர்களே எப்படி? ஒரு சினிமாவில் வடிவேலு சொல்வார், ‘வரும் ஆனா வராது’ என்று, அதுபோலத்தான் இருக்கிறது. அது மட்டும் சொல்லவில்லை.

தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வருவோம் என்று சொல்லி இருக்கிறார். அது என்ன எண்ணற்ற திட்டம். எய்ம்ஸ் திட்டமே சிரிப்பாகச் சிரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு யோக்கியதை இல்லை”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x