

பாமகவுக்குப் போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்குத்தான் என்று விருத்தாச்சலம் பிரச்சாரக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விருத்தாச்சலத்தில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருமாவளவன் நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''பாஜக மற்றும் பாமகவுடன் இணைந்து சந்தர்ப்பவாதக் கூட்டணியை அதிமுக அமைத்திருக்கிறது. அதிமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
பாஜகவினர் போட்டியிடும் 20 தொகுதிகளில் மட்டுமல்ல, அதிமுக, பாமக கூட்டணி உட்பட, அந்தக் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறக் கூடாது. விருத்தாச்சலம் தொகுதியில் பாமக வேட்பாளர் வெற்றி பெற்றால், வெற்றி பெறும் உறுப்பினர் பாமக உறுப்பினராக இருக்க முடியாது. பாஜக உறுப்பினராகத்தான் மாறுவார். அதுதான் நிதர்சனமான உண்மை.
தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுவதால் பாஜக மோடி அரசு, ஸ்டாலினின் மகள் வீட்டில் ஐடி ரெய்டு நடத்துகிறது. தேர்தல் நேரத்தில் இந்தச் சோதனை நடத்தப்படுவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. ஏன் பாஜக பிரமுகர்கள் ஒருவர் வீட்டில் கூட ஐடி ரெய்டு நடத்தப்படுவதில்லை?
இப்போதைய அதிமுக, எம்ஜிஆர் காலத்து அதிமுக அல்ல. ஜெயலலிதா கால அதிமுகவும் அல்ல. மோடியின் கட்டுப்பாட்டில் உழல்கிற எடப்பாடியாரின் அதிமுக. சொல்லப்போனால் பாஜகவின் பினாமிக் கட்சியாக அதிமுக உள்ளது. மக்கள் அதிமுகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்குப் போடுவதுதான். அதேபோல பாமகவுக்குப் போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்குத்தான் செல்லும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பாஜகவுக்கு 3 சின்னங்கள் உள்ளன. ஒன்று சொந்தச் சின்னம் தாமரை, மற்றொன்று இரட்டை இலை, மூன்றாவது சின்னம் மாம்பழம். பாஜகவுக்குத் தமிழகத்தில் 3 முகங்கள் உள்ளன. ஒன்று சொந்த முகம், அடுத்தது அதிமுகவின் முகம், மூன்றாவது பாமகவின் முகம்'' என்று திருமாவளவன் பேசினார்.