

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்த வேனில் பேரணியாகச் சென்று வாக்குச் சேகரித்தார்.
தமிழகத்தில் ஏப்.6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாளை (ஏப். 4) மாலை 7 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. எனவே, அதிமுக, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், அமமுக - தேமுதிக கூட்டணிக் கட்சிகள், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பாஜக சார்பாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்துக்காகத் தொடர்ந்து தமிழகம் வந்தனர்.
இந்நிலையில், நேற்று (ஏப். 2) இரவு மத்திய அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தார். இன்று (ஏப்.3) காலை 10.45 மணியளவில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு ஆதரவாக, அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் பாண்டி பஜார் நோக்கி பேரணியாகச் சென்று அமித் ஷா ஆதரவு திரட்டினார். அப்போது, அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமித் ஷாவும் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மீது மலர்களைத் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது, வேட்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பேரணியின் நிறைவில் அமித் ஷா, பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பேரணியில் பாஜக ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அதிமுக, பாமகவினரும் கலந்துகொண்டனர்.
பிரச்சாரம் நிறைவடைந்ததும் விமான நிலையம் செல்லும் அமித் ஷா, அங்கிருந்து தூத்துக்குடி செல்கிறார். அங்கிருந்து திருநெல்வேலி, ராமநாதபுரத்தில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்கிறார்.