பிரச்சாரக் களத்தில் சந்தித்துக் கொண்ட முன்னாள் அமைச்சர்கள்: திருநள்ளாறில் வாக்கு சேகரிப்பில் சுவாரஸ்யம்

திருநள்ளாறு கருக்கன்குடி பகுதியில் ஒருவருக்கொருவர் வாக்கு கேட்டுக் கொண்ட முன்னாள் அமைச்சர்கள் ஆர்.கமலக்கண்ணன், பி.ஆர் சிவா ஆகியோர்
திருநள்ளாறு கருக்கன்குடி பகுதியில் ஒருவருக்கொருவர் வாக்கு கேட்டுக் கொண்ட முன்னாள் அமைச்சர்கள் ஆர்.கமலக்கண்ணன், பி.ஆர் சிவா ஆகியோர்
Updated on
1 min read

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியில், எதிரெதிராக போட்டியிடக் கூடிய முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து, ஒருவருக்கொருவர் வாக்கு சேகரித்தது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சரும், அத்தொகுதியின் தற்போதையை எம்.எல்.ஏவுமான ஆர்.கமலக்கண்ணன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தொழிலதிபர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் போட்டியிடுகிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில், இத்தொகுதி என்.ஆர்.காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் என அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா பெரிதும் நம்பியிருந்தார்.

அதற்கேற்ற வகையில் தேர்தல் பணிகளையும் தொடங்கியிருந்தார். ஆனால் இத்தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் விரக்தி அடைந்த அவர் சுயேச்சையாகப் போட்டியிட மனு தாக்கல் செய்தார். இதனால் பின்னர் அவர் என்.ஆர்.காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார்.

திருநள்ளாறு தொகுதியில் இந்த 3 வேட்பாளர்களிடையேதான் பிரதான போட்டி நிலவுகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்.2) மாலை கருக்கன்குடி பள்ளிவாசல் அருகில் உள்ள பகுதியில் ஆர்.கமலக்கண்ணனும், பி.ஆர்.சிவாவும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் சிவாவிடம் சென்று துண்டு பிரசுரத்தைக் கொடுத்து தமக்கு வாக்களிக்குமாறு சிரித்துக் கொண்டே கமலக்கண்ணன் கேட்டுக் கொண்டார். உடனே சிவாவும் முக மலர்ச்சியுடன் தனக்கு வாக்களிக்குமாறு கமலக்கண்ணனிடம் கேட்டுக் கொண்டார்.

இருவரும் ஒருவரையொருவர் அரசியல் ரீதியாக மிகத்தீவிரமாக விமர்சித்து வரும் நிலையில், இவ்வாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது அங்கிருந்த பொதுமக்களைக் கவர்ந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in