

முத்தலாக் தடை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு பிரச்சாரம் செய்த முஸ்லிம் பெண் அமித்ஷா முன்னிலையில் நேற்றுமுன்தினம் பாஜகவில் இணைந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் பாத்திமுத்து (51). இவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து கடந்த சில நாட்களாக பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் முத்தலாக் தடை சட்டத்தை ஆதரித்தும், 15 ஆண்டுகளுக்கு முன் அந்தச் சட்டம் வந்திருந்தால் தன் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்காது என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நேற்று முன்தினம் வேலாயுதம்பாளையத்துக்கு மத்திய உள்துறை அமித் ஷா வந்திருந்தார். அப்போது அமித்ஷா முன்னிலையில் பாத்திமுத்து பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜக பொறுப்பாளர் சிடிரவி பாத்திமுத்துவுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.