Published : 03 Apr 2021 03:13 AM
Last Updated : 03 Apr 2021 03:13 AM

தேர்தல் செலவுக்கு நிதி இல்லாததால், தேமுதிக வேட்பாளர்கள் திண்டாட்டம்: கரோனா பாதிப்பால் மூத்த நிர்வாகிகளின் பிரச்சாரத்திலும் தொய்வு

தேர்தல் செலவுக்கு போதிய நிதி இல்லாததால் தேமுதிக வேட்பாளர்கள் திண்டாடி வருகின்றனர். மேலும், கரோனா பாதிப்பால் மூத்த நிர்வாகிகளின் பிரச்சாரத்திலும் தொய்வு ஏற்பட்டுள்ளதால், அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜயகாந்த் 2006-ல் தேமுதிக கட்சியை தொடங்கினார்.அந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. இதில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பாமகவை எதிர்த்துப் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குச் சென்றார்.

இதையடுத்து, 2011-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தலைமையில் மக்கள் நல கூட்டணி உருவாக்கப்பட்டு, உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் அதிமுகவிடம் தோல்வியைச் சந்தித்தார். அடுத்தடுத்த தேர்தலில் தேமுதிக தோல்வியை தழுவியதால், 2009ம் ஆண்டில் 10.3 சதவீதமாக இருந்த தேமுதிகவின் வாக்கு சதவீதம் 2.19 சதவீதமாக குறைந்தது.

இந்த சட்டப்பேரவை தேர்தலில், கூடுதல் இடம் ஒதுக்காததால், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது. அதன்பிறகு, அமமுகவுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, தேமுதிக 60 இடங்களில் போட்டியிடுகிறது.

விருத்தாசலத்தில் பிரேமலதா போட்டியிடுவதால், அந்த தொகுதியில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். தேர்தல் நாள் நெருங்கவுள்ள நிலையில், அதிமுக, திமுக கூட்டணியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக இருக்கிறது. இவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தேமுதிகவின் தேர்தல் பிரச்சாரம் இல்லை. இதேபோல், பெரும்பாலான வேட்பாளர்கள் பிரச்சாரத்துக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தேமுதிக வேட்பாளர்கள் சிலர் கூறியதாவது: வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதை விட, நம் கட்சியின் வளர்ச்சியும், வாக்கு சதவீதம் அதிகரிப்பது தான் முக்கிய நோக்கம் என கட்சி தலைமை தெரிவித்திருந்தது. அதன்படி, நாங்கள் தேர்தலை சந்திக்க உழைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். எங்கள் கட்சியின் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தினர் தான். அவர்களால் பல லட்சம் ரூபாய் செலவு செய்ய முடியாது. அதிமுக, திமுகவில் அந்தந்த தொகுதி வேட்பாளர்களுக்கு பல லட்சம் ரூபாய் தேர்தல் செலவுக்கு அளித்து வருகின்றனர். ஆனால், எங்களுக்கு எங்கள் கூட்டணி சார்பிலோ, கட்சியின் தலைமை சார்பிலோ ரூ.100 கூட வழங்கவில்லை.

வேட்பாளர்களிடம் இருக்கும் பணத்தை வைத்து கொண்டு இதுநாள் வரையில் பிரச்சாரத்தை செய்து வருகிறோம். இன்னும் சில நாட்களுக்கு பிரச்சார செலவுக்கு என்ன செய்வது என புரியவில்லை. தேர்தலுக்கான வாகன செலவும், தொண்டர்களுக்கான உணவு போன்ற பிரச்சார செலவுகளுக்கு கட்சி நிதி ஒதுக்கினால் கூட, கட்சி நிர்வாகிகள் சிறப்பாக தேர்தல் பணியை ஆற்றுவார்கள். தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து, வீட்டில் ஓய்வில் இருக்கிறார். இதேபோல், தேமுதிக துணை செயலாளரும், விருகம்பாக்கம் வேட்பாளருமான பார்த்தசாரதியும், சேலம் மேற்குதொகுதி வேட்பாளரும், தேமுதிககொள்கை பரப்புச் செயலாளருமான அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், தேமுதிகவின் பிரச்சாரத்திலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், தேமுதிக வேட்பாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x