கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் உயிரிழப்பு
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி நேற்று உயிரிழந்தார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் கடந்த 28-ம் தேதி சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக பிரச்சார மேடையில் அமர உள்ள நிர்வாகிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயபிரகாஷூக்கும்(45) கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஜெயபிரகாஷூக்கு கரோனாதொற்று இருப்பது உறுதியானது. பிரச்சார கூட்டம் நடந்த இடத்துக்கு அருகே அவர் வந்த நிலையில் கரோனா இருப்பது உறுதியான தகவல் அவருக்கு வந்தது.உடனடியாக அவர் சேலத்தில்உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பெற்றவந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், உயிரிழந்தார்.
பின்னர், ஜெயபிரகாஷ் உடல்செவ்வாய்ப்பேட்டை மயானத்துக்கு கொண்டு சென்று தகனம்செய்யப்பட்டது. இறந்த ஜெயபிரகாஷூக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.
