

கோவையில் இரு தினங்களுக்கு முன்பு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பிரச்சார ஊர்வலத்தின்போது, பெரியகடை வீதியில் ஒரு கடையின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக வியாபாரிகளை ஏற்கெனவே கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், மக்கள் நீதி மய்யம்தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். நேற்று, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடை நிர்வாகிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித் தார்.
பின்னர் அமைச்சர் கூறும்போது, “எந்தவிதமான ஜாதி, மத பிரச்சினைகளுக்கும் அதிமுக அரசு துளியும் இடமளிக்காது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை அனைவரும் சகோதரத்துவத்துடன் பாதுகாப்பாக வாழ அதிமுக என்றும் உறுதுணையாக இருக்கும். எந்தச் சூழ்நிலையிலும் அசம்பாவித சம்பவங்கள் கோவை மாவட்டத்தில் நடைபெற அனுமதிக்க மாட்டோம். அமைதியான கோவைக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார். கோவை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.