Published : 03 Apr 2021 03:13 AM
Last Updated : 03 Apr 2021 03:13 AM

கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதியை முன்னுதாரண தொகுதியாக மாற்றுவேன்: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உறுதி

கோவை மரக்கடை பகுதியில் நேற்று மாலை பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன்.

கோவை

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மரக்கடை, ஐந்து முக்கு, செட்டி வீதி, அசோக் நகர், காந்தி பூங்கா, சுக்ரவார்பேட்டை, தெலுங்கு பிராமின் வீதி, கோனியம்மன் தேர்நிலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை தொடங்கி இரவு வரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கமல்ஹாசன் பேசியதாவது:

கோவை தெற்கு தொகுதியின்முகமாக நான் மாறிக்கொண்டு வருகிறேன். இங்கு மதநல்லிணக்கத்துக்கு எதிராக நிகழும் சூழ்ச்சிகளை தகர்க்க வேண்டும் என்பது எனது முக்கியமான இலக்காக உள்ளது.

இந்த தொகுதியில் நான் திட்டமிட்டதை விட மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அவற்றில் பல பணிகளை 100 நாட்களில் முடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறேன். இலவசமாக கொடுக்கிறோமோ இல்லையோ, தரமான கல்வியை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். அதற்கு முதலில் ஆசிரியர்கள் நல்ல முறையில் இருக்க வேண்டும். ஆசிரியர்களின் நலன் சார்ந்த பல திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.

கோவையில் சிறிதளவு அடிப்படை வசதிகள் கூட இல்லாத பகுதிகள் உள்ளன. கோவை தெற்கு தொகுதியை முன்னுதாரண தொகுதியாக மாற்றிக்காட்ட வேண்டியது எனது கடமை. அதற்கு பொதுமக்களும் எனக்கு ஒத்துழைக்க வேண்டும். மேலும் கோவையை ஒரு மீடியா மையமாகவும், சினிமா தொழில் நடக்கும் மையமாகவும் மாற்ற முடியும் என நம்புகிறேன். ஒரே இடத்தில்தான் சினிமா எடுக்க வேண்டும் என்ற விதிகள் எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, கமல்ஹாசன் நேற்று சுங்கம்- புலியகுளம் சாலையில் உள்ள கல்லுக்குழி பகுதிக்கு சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

தங்கக்கட்டி வியாபாரிகள் சந்திப்பு

சொக்க தங்கக்கட்டி வியாபாரிகள் சங்க பொருளாளர் செந்தில் சீனிவாசன் உள்ளிட்டோர் கமல்ஹாசனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், ‘புல்லியன்’ (சொக்க தங்கம்) வர்த்தகர்கள் சொந்த மூலதனத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர். 0.05 சதவீதம் என மிகக்குறைந்த லாப விகிதத்தில் வர்த்தம் செய்யும் நிலையில், 0.10 சதவீதம் டி.சி.எஸ்வரி விதிப்பது தொழிலை மிகவும் பாதிக்கிறது.

சொக்க தங்கக்கட்டி வர்த்தகர் களுக்கு வங்கிக்கடன் எதுவும் கிடைப்பதில்லை.

எனவே, டி.சி.எஸ். ரத்துடன், ஜி.எஸ்.டி.யை குறைக்கவும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

கோவை சிவானந்தா காலனியில் மாற்றுத்திறனாளிகளை கமல்ஹாசன் சந்தித்து பேசினார். அப்போது, ‘தேர்தலில் போட்டியிடாமல் ஆங்கிலோ இந்தியன் பிரிவினருக்கு வழங்குவது போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பேர வையில் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x