

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜனை ஆதரித்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சியில் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: ஏப்ரல் 6-ம் தேதி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பது என பொள்ளாச்சி பகுதி மக்கள் முடிவு செய்துள்ளீர்கள். கடந்த மக்களவைத் தேர்தலில் 26 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பொள்ளாச்சி தொகுதியில் திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்தீர்கள். நீங்கள் அளித்த வாக்குகளின் மூலம் இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் மாதம் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.
அதனால் பணம் எடுக்க ஏடிஎம் மையத்துக்கு சென்ற ஏராளமானோர் ஏடிஎம் மையத்தின் வாசலில் உயிரிழந்தனர். 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாத காசாக பிரதமர் மோடி ஆக்கியது போல, நீங்களும் பிரதமர் மோடியையும், முதல்வர் பழனிசாமியையும் செல்லாக் காசுகளாக ஆக்க வேண்டும். முதல்வர் பழனிசாமி தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் தோற்பார். திமுக ஆட்சிக்கு வந்த பின்பு ஊழல் செய்த அனைத்து அமைச்சர்களும் சிறைக்கு செல்வது உறுதி. மூன்று ஆண்டுகளுக்கு முன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிச் சென்றார்.
இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லை. அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சிதான் அதிகம் பாதிக்கப்பட்டது. பெண்களை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளனர். இந்த சம்பவத்தை மறந்து விடாதீர்கள். இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என திமுகதான் முதலில் கேட்டது. சிபிஐ விசாரணைக்கு பின்னர்தான் அதிமுக நகர செயலாளர் அருளானந்தம் கைதுசெய்யப்பட்டார்.
கருத்துக் கணிப்பில் திமுக 160 தொகுதிகளில் வெற்றிபெறும் என தெரிவித்திருந்தனர். பிரதமர் மோடி தமிழகத்தில் பிரச்சாரம் செய்த பின்னர் 180 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. எனது தங்கை வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனையிட்டு வருகின்றனர். நான் சவால் விடுகிறேன். தைரியம் இருந்தால் எனது வீட்டுக்கு சோதனைக்கு வாருங்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். பிரச்சாரத்தின்போது ஒரு பெண் குழந்தைக்கு ‘செந்தாமரை’ என பெயர் சூட்டினார்.
உடுமலை
திருப்பூர் மாவட்டம் முக்கோணம் பகுதியில் மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன், உடுமலை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.தென்னரசு ஆகியோரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “ திமுக ஆட்சிக்கு வந்ததும் பிஏபி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான ஆனைமலையாறு- நல்லாறு அணை திட்டம் நிறைவேற்றப்படும். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை புனரமைக்கப்படும். அமராவதி ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்படும். மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு பட்டா வழங்கப்படும். உடுமலை மற்றும் மடத்துக்குளம் அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். உடுமலை நகரப் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்” என்றார்.